விரைவாக குணமாகி வரும் ரிஷப் பந்த்!

ரிஷப் பந்த் | கோப்புப்படம்
ரிஷப் பந்த் | கோப்புப்படம்
Updated on
1 min read

ரிஷப் பந்த்துக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை தேவையில்லை எனவும், எதிர்பார்த்ததை விட அவர், விரைவாக குணமாகி வருகிறார். விரைவிலேயே அவர், களத்துக்கு திரும்ப வந்துவிடுவார் எனவும் நம்புவதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2022, டிசம்பர் 30-ம் தேதி டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்த போது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்தது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அவர் களம் திரும்ப ஓராண்டு காலம் ஆகும் என சொல்லப்பட்டது.

அண்மையில் நடந்த முடிந்த ஐபிஎல் 2023 சீசனின் போது டெல்லி அணி வீரர்களை அவர் சந்தித்திருந்தார். டெல்லி அணி விளையாடிய போட்டியையும் அவர் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பந்த், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in