தென் ஆப்பிரிக்கா 455 ரன்கள் குவித்து டிக்ளேர்: ஆசிய மண்ணில் முதல் சதமடித்தார் டுமினி

தென் ஆப்பிரிக்கா 455 ரன்கள் குவித்து டிக்ளேர்: ஆசிய மண்ணில் முதல் சதமடித்தார் டுமினி
Updated on
2 min read

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 166.2 ஓவர்களில் 9 விக்கெட் 455 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இலங்கை மண்ணில் தென் ஆப்பிரிக்கா எடுத்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

8-வது வீரராக களமிறங்கிய ஜே.பி.டுமினி, டெஸ்ட் போட்டியில் 4-வது சதத்தைப் பதிவு செய்தார். ஆசிய கண்டத்தில் அவர் அடித்த முதல் சதம் இதுதான். ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்திருந்த தென் ஆப்பிரிக்காவை சதமடித்து தூக்கி நிறுத்தினார் டுமினி.

இலங்கையின் காலே நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 91 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்திருந்தது. டிகாக் 17 ரன்களுடனும், ஸ்டெயின் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.

டி காக் அரைசதம்

2-வது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின் 3 ரன்களில் ஆட்டமிழக்க, டி காக்குடன் இணைந்தார் டுமினி. இந்த ஜோடி நிதானமாக ஆட, 102 ஓவர்களில் 300 ரன்களை எட்டியது தென் ஆப்பிரிக்கா. இதனிடையே டி காக் 108-வது ஓவரில் அரை சதமடித்தார். 86 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்ட டி காக், அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 90 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த டி காக், டெஸ்ட் போட்டியில் முதல் அரைசதத்தைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

9-வது விக்கெட்டுக்கு 75

இதையடுத்து டுமினியுடன் வெர்னான் பிலாண்டர் ஜோடி சேர, மதிய உணவு இடைவேளையின்போது 121 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்திருந்தது தென் ஆப்பிரிக்கா. உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியை டுமினியும், பிலாண்டரும் இணைந்து வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

டுமினி 99 பந்துகளில் அரை சதமடிக்க, தென் ஆப்பிரிக்கா 400 ரன்களை நெருங்கியது. அந்த அணி 389 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் மேத்யூஸ். 96 பந்துகளைச் சந்தித்த பிலாண்டர் 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிலாண்டர்-டுமினி ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது.

டுமினி சதம்

இதையடுத்து டுமினியுடன் இணைந்தார் மோர்ன் மோர்கல். இந்த ஜோடியும் இலங்கை பவுலர்களுக்கு போக்கு காட்டியது. இந்த ஜோடி சிறப்பாக ஆட 165-வது ஓவரில் 450 ரன்களைக் கடந்தது தென் ஆப்பிரிக்கா. தேநீர் இடைவேளைக்குப் பிறகு டுமினி சதமடித்தார். அவர் 206 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் டெஸ்ட் போட்டியில் தனது 4-வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

டுமினி சதமடித்த அடுத்த பந்தில் மோர்கல் 22 ரன்களில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹசிம் ஆம்லா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். அப்போது தென் ஆப்பிரிக்கா 166.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 455 ரன்கள் குவித்திருந்தது. டுமினி 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டுமினி-மோர்கல் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது.

இலங்கை தரப்பில் தில்ருவான்பெரேரா 4 விக்கெட்டுகளையும், சுரங்கா லக்மல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை-30/0

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்துள்ளது. ஜே.கே.சில்வா 8, உபுல் தரங்கா 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in