

கோவை: புதுடில்லியில் நடந்த அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், கோவையைச் சேர்ந்த இளம் பெண் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டெல்லியில் ‘கேலோஇந்தியா’ பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் என்ற தலைப்பில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள், கைப்பந்து, கூடைப்பந்து, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் நடந்து வருகின்றன.
துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை பிஎஸ்ஜ ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவியும், துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிறப்புப் பயிற்சி பெற்ற வீராங்கனையுமான நிவேதிதா வி.நாயர் (21) கலந்து கொண்டார்.
20 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் நடந்த போட்டியில் 20 பேர் கலந்து கொண்டனர். இதில் நிவேதிதா வி.நாயர் 2-வது இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 20 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் சிறந்த வீராங்கனையான இவர், கடந்த 2017-ம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள, ரைபிள் கிளப்பில் இவர் பயிற்சி பெற்று வருகிறார். மாணவி நிவேதிதா வி.நாயருக்கு பயிற்சியாளராக அவரது தந்தை சரவணன் உள்ளார். மகளுக்கு பயிற்சியை அளித்து, அவர் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்.
இதுகுறித்து சரவணன் கூறும்போது, ‘‘நான் என்.எஸ்.ஜி பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி உள்ளேன்.அதிலிருந்து வந்த பின்னர், எனது மகள் நிவேதிதா பி.நாயருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். தினமும் 6 மணி நேரம் அவர் பயிற்சியில் ஈடுபடுவார்.
கத்தார் நாட்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம், பெருநாட்டில் நடந்த உலகளவிலான போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம், ஜெர்மனியில் நடந்த ஜூனியர் வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை அவர் வென்றுள்ளார். துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் உள்ள அவர், நாட்டுக்கு பெருமை தேடித் தர பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை குவித்து வருகிறார்,’’ என்றார்.