

புதுடெல்லி: சிஎஸ்கே - தோனி, வாழ்த்துகள்... குறைந்தபட்சம் உங்களுக்காவது மரியாதை - அன்பும் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு வைத்தனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இதில், இந்தியாவுக்காக ஒலிம்பிக் உட்பட உலக அளவில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோர் அடங்குவர்.
கடந்த ஞாயிறு அன்று (மே 28) போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், அவர்களுக்கு ஆதரவாக உள்ள விவசாயிகள் என அனைவரும் இணைந்து புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய டெல்லி போலீஸார், கைதும் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச உள்ளதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், போராட்டங்களுக்கு மத்தியில் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு சாக்ஷி மாலிக் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். வாழ்த்துடன் தங்களுக்கான நியாயம் மறுக்கப்படும் செய்தியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில், “வாழ்த்துகள் தோனி ஜி அண்ட் சிஎஸ்கே... குறைந்தபட்சம் சில விளையாட்டு வீரர்களுக்காகவது அவர்களுக்கு உரிய மரியாதையும் அன்பும் கிடைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், எங்களைப் பொறுத்தவரை, நீதிக்கான போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.