“அன்பும், உணர்ச்சியும் அளப்பரியது; மீண்டும் ஒரு சீசனில் விளையாடுவது ரசிகர்களுக்கான பரிசாக இருக்கும்” - தோனி உற்சாகம்

தோனி
தோனி
Updated on
1 min read

அகமதாபாத்: மீண்டும் ஒரு சீசனில் விளையாடுவது ரசிகர்களுக்கு நான் அளிக்கும் பரிசாக இருக்கும் என சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16-வது சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.

பொதுவாக தோனி இந்திய அணிக்காக விளையாடிய நேரங்களிலும், ஐபிஎல் தொடரிலும் வெற்றி பெற்றாலும், தோல்வியை சந்தித்தாலும் பெரிய அளவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தமாட்டார். ஆனால் இம்முறை அவரிடம் இருந்து அதீத உணர்ச்சி வெளிப்பட்டது. கடைசி இரு பந்துகளையும் ஜடேஜா சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டி வெற்றி தேடிக் கொடுத்து விட்டு தன் முன்பு வந்த நின்ற கணமே அவரை தூக்கி கொண்டாடினார். அந்த நேரம் தோனியின் கண்கள் கலங்கின.

இறுதிப் போட்டிக்குப் பின்னர் தோனி கூறியதாவது: நீங்கள் தற்செயலாகப் பார்த்தால், ஓய்வு பெறுவதை அறிவிக்க இதுவே சிறந்த நேரம். நன்றி சொல்லிவிட்டு ஓய்வு பெறுவது எனக்கு எளிதான விஷயம். ஆனால் ஒன்பது மாதங்கள் கடினமாக உழைத்து இன்னும் ஒரு ஐபிஎல் சீசனில் விளையாடுவது கடினமான விஷயம். உடல் தாங்க வேண்டும். ஆனால் சிஎஸ்கே ரசிகர்களிடம் இருந்து நான் பெற்ற அன்பின் அளவு, இன்னும் ஒரு சீசனில் விளையாடுவது அவர்களுக்கு நான் அளிக்கும் பரிசாக இருக்கும்.

அவர்கள் தங்கள் அன்பையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்திய விதம், அவர்களுக்காக நான் செய்ய வேண்டிய ஒன்று இருக்கிறது. இது எனது தொழில் வாழ்க்கையின் கடைசிப் பகுதி. இந்த சீசனை அகமதாபாத்தில் தொடங்கினோம். மைதானம் முழுவதுமே என் பெயரை உச்சரித்தார்கள். சென்னையிலும் அப்படித்தான் இருந்தது. அப்போது எனது கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது. அதை சமாளித்து சகஜ நிலைக்கு திரும்ப சிறிது நேரம் ஆனது. எனவே மீண்டும் வந்து என்னால் முடிந்ததை விளையாடுவது சிறப்பாக இருக்கும் என கருதுகிறேன்.

நீங்கள் வெல்லும் ஒவ்வொரு கோப்பை அல்லது இருதரப்பு தொடருக்கும் அதன் சொந்த சவால்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். நெருக்கடி வரும்போது, தனிப்பட்ட வீரர்களை தயாராக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் சமாளிக்கக்கூடிய அழுத்தத்தின் அளவு வேறுபட்டது. நாங்கள் அதை செய்ய முயற்சித்தேன். இவ்வாறு தோனி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in