

அகமதபாத்: சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, தன்னை கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் தூக்கிய வைரல் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் டிபி புகைப்படமாக ரவீந்திர ஜடேஜா வைத்திருக்கிறார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது பந்தை ஜடேஜா சிக்ஸருக்கு பறக்கவிட ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. கடைசி பந்தை ஜடேஜா பைன் லெக் திசையில் பவுண்டரிக்கு விரட்ட சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜடேஜா 6 பந்துகளில் 15 ரன்கள் விளாசியது சென்னையின் வெற்றிக்கு உறுதுணைபுரிந்தது.
வின்னிங் ஷாட் அடித்த ரவீந்திர ஜடேஜாவை மைதானத்துக்குள் ஓடிவந்து கட்டியணைத்துத் தூக்குவார் தோனி. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
சில தினங்களுக்கு முன்னர் தோனி - ஜடேஜா இடையே மோதல் நிலவுவதாக வெளியான தகவல்களுக்கு இந்தப் புகைப்படம் முற்றுப்புள்ளி வைத்தது. இந்த நிலையில், அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிஸ்ப்ளே பிக்சர் ஆக ஜடேஜா வைத்திருக்கிறார்.
மேலும், வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரே ஒருவருக்காக நாங்கள் இதனைச் செய்தோம்..எம்.எஸ்.தோனிக்காக... மஹி பாய்... உங்களுக்காக எதையும் செய்வேன்...” என்று ஜடேஜா பதிவிட்டுள்ளார்.