

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி நேற்று மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெறுகிறது. ‘இன்று மேட்ச் இருக்கா? இல்லையா’ என்ற ஏக்கத்தில் நேற்று நேரலையில் போட்டியைக் காண காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் எஞ்சியது. அதனால், இன்று காலை முதலே அகமதாபாத்தின் வானிலை சூழலை அறிந்துகொள்ள ஆர்வம் கட்டப்பட்டு வருகிறது. ‘மழை இருக்காதுல்ல’ என்பதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இந்த நிலையில், அகமதாபாத் நகரில் மதியம் 2.42 மணி நேர நிலவரப்படி நாள் முழுவதும் வானிலை சாதகமாக இருக்கும் என்றே களத்தில் இருந்து வரும் தகவல் உறுதி செய்கின்றன. 36° செல்சியஸ் வெப்பம் நிலவுவதாகவும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும் தகவல். இடியுடன் கூடிய மழை பொழிவுக்கான வாய்ப்பு 6% என சொல்லப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இன்றைக்கான வானிலை முன்னறிவிப்பாக உள்ளது.
மறுபக்கம் வெதர்.காம் வெளியிட்டுள்ள வானிலை நிலவர தகவலில் பகல் முழுவதும் வானம் தெளிவாக இருக்கும் என்றும். மாலை நேரத்தில் மேகமூட்டம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6.30 மணிக்கு பிறகு வானம் மேகமூட்டம் இன்றி இருக்கும் என்றும், மாலையில் 22% மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இறுதிப் போட்டி நடைபெறும்போது வானம் மேகமூட்டம் இன்றி இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அகமதாபாத்தில் இன்றும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னர் நடக்கலாம்” என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
மழை பெய்தால் என்ன நடக்கும்? - மழை காரணமாக இந்த போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு, இன்று இரவு 09:40 மணிக்குள் போட்டி தொடங்கினால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படமால் போட்டி முழுவதுமாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் 5 ஓவர்கள் கொண்ட இன்னிங்ஸ்களில் விளையாட இரவு 11:56 கட்-ஆஃப் நேரமாக உள்ளது. இது ஐபிஎல் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு. அதுவே இன்றும் பொருந்தும் என தெரிகிறது.
அதுவும் முடியவில்லை என்றால் சூப்பர் ஓவர் நடத்தப்படும். அதற்கும் சாத்தியம் இல்லை என்றால் லீக் சுற்றில் அதிக புள்ளிகளை பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்படும்.