

அகமதாபாத்: சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மே 28 - ஞாயிறு) ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற இருந்தது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. ஆனால் நேற்று பெய்த கனமழை காரணமாக போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
தொடர்ந்து இரு அணியின் பயிற்சியாளர்களான ஆஷிஷ் நெஹரா, ஸ்டீபன் ஃபிளெம்மிங் மற்றும் போட்டியை நடத்தும் நடுவர்களான நிதின் மேனன், ரோட் டக்கர் கலந்து பேசி போட்டியை இன்று (மே 29) ஒத்திவைத்துள்ளனர். அதன் படி இன்று மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
போட்டி ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங் ரசிகர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், “இறுதிப் போட்டி வெகு தூரத்தில் இல்லை. எனவே இந்த ஆண்டு எங்கள் அணிக்கு கிடைத்த அனைத்து ஆதரவுக்கும் நன்றி சொல்ல இதுவே சரியான நேரம். கேப்டன் தோனி மீதான உங்கள் அன்பை நாங்கள் அனைவரும் புரிந்து கொள்கிறோம். ஆனால் மைதானம் முழுக்க மஞ்சள் நிறத்தை பார்ப்பது அற்புதமான அனுபவம். இன்றைய இரவு என்ஜாய் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் இறுதிப் போட்டி முதல் முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றால் 5-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் வென்ற அணி என்ற அந்தஸ்தை மும்பைக்கு அடுத்ததாக எட்டும். அதே போல குஜராத் வென்றால் மும்பை மற்றும் சென்னை அணிக்கு அடுத்ததாக தொடர்ந்து இரண்டு சீசன்களில் பட்டம் வென்ற அணி என சாதனை படைக்கும்.