

கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் சாம்பியன் பட்டம் வென்றார்.
கோலாலம்பூரில் நடைபெற்று வந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய், 34-ம் நிலை வீரரான சீனாவின் வெங் ஹாங் யங்கை எதிர்த்து விளையாடினார். 94 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹெச்.எஸ்.பிரனோய் 21-19, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
கடந்த ஆண்டு தாமஸ் கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் ஹெச்.எஸ்.பிரனோய் முக்கிய பங்குவகித்தார். எனினும் 2017-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் கிராண்ட் பிரீக்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரனோய் அதன் பின்னர் சில தொடர்களில் முக்கியமான கட்டங்களில் தோல்வியை சந்தித்தார். கடந்த ஆண்டு சுவிஸ் ஓபனில் இறுதிப் போட்டியில் தோல்வி கண்டிருந்தார். தொடர்ந்து மலேசியா, இந்தோனேஷியா தொடரில் பிரனோய் அரை இறுதி சுற்றுடன் வெளியேறினார். தற்போது தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை கைப்பற்றி உள்ளார்.