

சலாலா (ஓமன்): ஆடவர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஓமன் நாட்டிலுள்ள சலாலா நகரில் நடைபெற்று வருகின்றன.
‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தாய்லாந்து, சீன தைபே அணிகளும், ‘பி’ பிரிவில் மலேசியா, தென் கொரியா,வங்கதேசம், ஓமன், உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா 18-0 என்ற கோல்கள் கணக்கில் சீன தைபேவையும், 2-வது லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் தோற்கடித்திருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தியா தனது 3-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்தியஅணி தரப்பில் ஷர்தா நந்த் திவாரி24-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இடைவேளை வரை இந்த நிலையே நீடித்தது. ஆனால் 2-வது பாதி ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர் பஷரத் அலி ஒரு கோலடித்தார். ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் இந்த கோல் அடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே ஆட்டம் 1-1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிவடைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்தியா 7 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.