Published : 29 May 2023 07:31 AM
Last Updated : 29 May 2023 07:31 AM

WTC Final | விராட் கோலி, ரோஹித் சர்மா முக்கியமான வீரர்களாக இருப்பார்கள்: ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி கருத்து

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி

அகமதாபாத்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் முக்கியமான வீரர்களாக திகழ்வார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ம் தேதி லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்நிலையில் இந்த போட்டி தொடர்பாக ஐசிசி இணையதளத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியிருப்பதாவது:

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கடந்த கால (பார்மில் இல்லாத) விராட் கோலியை காண்பது கடினம். அவர், உண்மையிலேயே அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் மீண்டும் சிறந்த ஃபார்முக்கு திரும்பி வருகிறார். எனவே விராட் கோலியும், ரோஹித் ஷர்மாவும் பேட்டிங்கில் இந்திய அணிக்கு முக்கியமானவர்களாக இருப்பார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வித்தியாசமானது. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்து ஆடுகளங்களின் தன்மை வித்தியாசமாக இருக்கும்.

வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கப் போகிறார்கள் என நினைக்கிறேன். பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் முக்கியமான வீரர்களாக இருப்பார்கள். இந்திய அணியிலும் நிறைய சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். மொகமது சிராஜ், மொகமது ஷமி போன்ற சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களும், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களும் இந்திய அணியில் உள்ளனர்.

இது ஒரு உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சு தாக்குதல். எனவே ஆஸ்திரேலிய அணியானது, இந்தியாவை வீழ்த்துவதற்கு சிறந்த முறையில் விளையாட வேண்டும்.

இரண்டு சிறந்த அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் யார் மேலே வருகிறார்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறேன். நாங்கள் நல்ல, கடினமான, நியாயமான கிரிக்கெட்டைப் பார்க்க விரும்புகிறோம், யார் மேலே வருகிறாரோ அவர் தகுதியானவர். மேலும் இது ஒரு அருமையான போட்டியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விராட் கோலி ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய நிலையில் தொடர்ச்சியாக இரு சதங்கள் விளாசி இருந்தார். இந்த சீசனில் அவர், சிறப்பாக விளையாடிய போதிலும் பெங்களூரு அணியால் லீக் சுற்றை கடக்க முடியாமல் போனது. ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேறாத நிலையில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகும் விதமாக விராட் கோலி, மொகமது சிராஜ் உள்ளிட்ட சில வீரர்கள் லண்டன் புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கு அவர்கள், கென்ட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x