

மும்பை: நடப்பு சீசனில் 16 இன்னிங்ஸ் விளையாடி மொத்தம் 851 ரன்களை குவித்துள்ளார் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சுப்மன் கில். கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் 3 சதங்களை அவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், அவரது ஆட்டத்தை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
“தனது அபார ஆட்டத்தின் மூலம் இந்த சீசன் மறக்க முடியாத சீசனாக மாற்றியுள்ளார் சுப்மன் கில். குறிப்பாக அவரது இரண்டு சதங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு சதம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நம்பிக்கை கொடுத்தது. மற்றொன்று மும்பைக்கு தோல்வியை கொடுத்தது. அது தான் கிரிக்கெட் விளையாட்டின் இயல்பு.
அவரது குணம், அமைதி, ரன் குவிக்க வேண்டும் என்ற முனைப்பு, விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவது போன்ற அவரது கள செயல்பாடு என்னை கவர்ந்தது.
மிக முக்கிய போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்க சரியான தருணத்தில் அபாரமாக ஆட வேண்டும். அதை சுப்மன் கில், மும்பைக்கு எதிராக 12-வது ஓவர் முதல் செய்திருந்தார். அது அணிக்கு நம்பிக்கை கொடுக்கும். அதுபோன்ற ஆட்டத்தை மும்பை வீரர் திலக் வர்மா ஆடி இருந்தார். சூர்யகுமார் யாதவ் அவுட் ஆகும் வரை மும்பைக்கு வெற்றிக்கான தருணம் இருந்தது.
குஜராத் வலிமையான அணி. கில், ஹர்திக், மில்லர் விக்கெட்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியம். அதே போல சென்னை அணியும் பலமான பேட்டிங் ஆர்டர் கொண்டுள்ளது. 8-வது பேட்ஸ்மேனாக தோனி களம் காண்கிறார். இந்த இறுதிப் போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கும் என கருதுகிறேன்” என சச்சின் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போட்டி இன்று நடத்தப்படவில்லை என்றால் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.