Published : 27 May 2023 03:42 PM
Last Updated : 27 May 2023 03:42 PM

“அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார். ஆனால்...” - மேத்யூ ஹெய்டனின் ‘புதிய’ பார்வை

எம்.எஸ்.தோனி என்பது ஐபிஎல் கிரிக்கெட்டின் குறியீடு. வணிகக் குறியீடு. அவர் அவ்வளவு எளிதில் ஓய்வு பெற்று விட முடியாது. அவர் ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்துவிட்டால் ஐபிஎல் கிரிக்கெட்டில் அது பெரிய ஓட்டை என்று பார்க்கப்படுவதோடு ஐபிஎல் கிரிக்கெட்டைச் சுற்றியுள்ள வர்த்தக வலைப்பின்னலிலும் பெரிய ஓட்டை விழும் என்றே கருதப்படுகின்றது. ஆகவே, தோனி ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது அவர் கையில் இல்லை என்றே தெரிகிறது. அதனால்தான் அவரும் வாயைத் திறக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய லெஜண்ட், முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்யூ ஹெய்டன், தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்பது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் சென்னையில் நடந்த முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 10-வது இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நான்கு முறை சாம்பியனான சென்னை அணி ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை இந்தியன்ஸ் சாதனையான ஐந்து ஐபிஎல் பட்டங்கள் என்பதைச் சமன் செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. அவர்கள் அகமதாபாத்தில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை சந்திக்கின்றனர்.

சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியை அவரது தலைமைக்காக ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து தள்ளினர். பல காயங்களின் பின்னடைவுகள் இருந்தபோதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அட்டவணையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது தோனியின் அபாரமான, சாதுரியமான கேப்டன்சியினால்தான் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இந்நிலையில், மேத்யூ ஹெய்டன் கூறியதாவது: “எம்.எஸ்.தோனி ஒரு மேஜிஷியன். அவர் வேறொருவரின் குப்பைகளை தனக்கான பொக்கிஷமாக்குபவர். அவர் மிகவும் திறமையான நேர்மறையான கேப்டன். அவர் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றைச் சொன்னார். இது அவரது பணிவு மற்றும் அவரது உண்மைத்தன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது.

அணி உரிமையாளருக்கும் அவருக்குமான உறவு வலிமையான அணியைக் கட்டமைக்க உதவியுள்ளது. அணியை கட்டமைப்பதில் தோனி கில்லாடி. இந்தியாவுக்காக அதைச் செய்தார். சிஎஸ்கேவுக்காகவும் திறம்படச் செய்தார். அவர் அடுத்த ஆண்டு ஆடுகிறாரா இல்லை, ஆடப்போவதில்லையா என்பது ஏறத்தாழ தேவையற்ற பிரச்சினைதான். தனிப்பட்ட முறையில் நான் என்ன நினைக்கிறேன் என்றால், தோனி ஆட மாட்டார் என்றுதான். ஆனால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனெனில், அதுதான் தோனி” என்று கூறினார் ஹெய்டன்.

முன்னதாக தோனியிடமே இதைப்பற்றி கேட்டபோது, ‘‘தெரியவில்லை. இன்னும் எட்டு-ஒன்பது மாதங்கள் உள்ளன. இப்போதே அந்தத் தலைவலியை நினைப்பானேன். எனக்கு முடிவெடுக்க நிறைய நேரம் இருக்கிறது. டிசம்பரில்தான் ஏலம், பார்ப்போம்” என்று கூறியதையும் நாம் இங்கு நினைவுகூர்வது நல்லது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x