

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்கு ஆடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்/ஆல்ரவுண்டர் ஷான் அபாட் இன்று (சனிக்கிழமை) 34 பந்துகளில் சதம் விளாசி புதிய டி20 வரலாறு படைத்துள்ளார். இந்த டி20 தொடரின் வரலாற்றில் 34 பந்துகளில் சதம் கண்ட 2வது வீரர் ஆனார் சான் அபாட்.
சர்ரே அணி ஒரு கட்டத்தில் 66/4 என்று தத்தளித்துக் கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷான் அபாட் இறங்கினார். மைதானம் முழுதும் பந்துகள் பறந்தன 11 சிக்சர்களை பறக்க விட்டார். 44 பந்துகளில் 110 நாட் அவுட் என்று வரலாற்று நாயகனாகத் திரும்பினார். சர்ரே அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர்களில் 223 ரன்கள் விளாசியுள்ளது.
எதிரணியினான கெண்ட் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. ஷான் அபாட் இன்னிங்சின் விசேஷம் என்னவெனில் சக ஆஸ்திரேலிய பவுலர் கேன் ரிச்சர்ட்சன் கெண்ட் அணிக்காக வீசிய 17வது ஓவரில் 30 ரன்களை அடித்து நொறுகினார் அபாட். இதற்கு முன்பு இதே டி20 பிளாஸ்ட்டில் 34 பந்துகளில் சதம் கண்ட வீரரும் ஆஸ்திரேலிய வீரர்தான், அவர் இப்போது நம்மிடையே இல்லை. கார் விபத்தில் பலியான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் என்ற அற்புத கிரிக்கெட் வீரர்தான் அது. 2004- அவர் அடித்த சத சாதனையை இப்போது சமன் செய்து வரலாறு படைத்தார் ஷான் அபாட்.
இதற்கு முன்பாக ஷான் அபாட் அடித்த அதிகபட்ச டி20 ஸ்கோர் 41 ரன்கள்தான். அனைத்து டி20 கிரிக்கெட் வடிவத்திலும் ஷான் அபாட் இன்று அடித்த அதிவேக சதம் 4வது அதிவேக சதமாகும். 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக கிறிஸ் கெய்ல் 31 பந்துகளில் சதம் விளாசியதுதான் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமாகும்.
கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் ஆர்சிபி / புனே வாரியர்ஸ்- 2013
ரிஷப் பண்ட் - 32 பந்துகளில் சதம் டெல்லி / இமாச்சல பிரதேசம்-2018
விஹான் லுப்பே - 33 பந்துகளில் சதம் நார்த்வெஸ்ட் / லிம்போபோ- 2018
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 34 பந்துகளில் சதம் - கெண்ட் / மிடில்செக்ஸ் - 2004
சான் அபாட் - 34 பந்துகளில் சதம் - சர்ரே / கெண்ட்- 2023
ஜேசன் ராய் காயம் காரணமாக ஷான் அபாட் கொஞ்சம் முன்னால் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ரே அணியின் கேப்டன் சாம் கரன் கூறும்போது, "அபாட்டை முன்னால் இறக்கி கொஞ்சம் பொறுப்பை அவருக்குக் கொடுத்தோம்” என்றார். ஆனால் அவர் அனைவரது எதிர்பார்ப்பையும் கடந்து அசத்திவிட்டார்" என்றார்.