Published : 26 May 2023 02:09 PM
Last Updated : 26 May 2023 02:09 PM

ஐபிஎல் 2023 அலசல்: ஸ்டாரில் இருந்து சூப்பர் ஸ்டார் ஆன ஷுப்மன் கில்! 

அகமதாபாத்: ஷுப்மன் கில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் கலக்கினார், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிரடி இன்னிங்ஸ்களை ஆடி ஸ்டார் அந்தஸ்து பெற்றார். ஆனால், இப்போது ஐபிஎல் 2023 தொடரின் மூலம் சூப்பர் ஸ்டார் வீரர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார்.

15 போட்டிகளில் 722 ரன்களை இதுவரை எடுத்துள்ளார். இந்த சீசனில் அதிக ரன்களை எடுத்தவராக ஷுப்மன் கில் முடிவடைவார். 722 ரன்களில் 71 பவுண்டரிகள், 23 சிக்சர்கள். அதிலும் நடப்பு சீசனில் இவர் அடித்த சிக்சர்கள் கடந்த 2 சீசன்களில் இவர் மொத்தமாக அடித்த சிக்சர்களை விடவும் அதிகம். இந்த ஐபிஎல் சீசனில் ஷுப்மன் கில் எடுத்த ஸ்கோர்கள் 0, 56, 49, 6, 36, 94, 6, 101, 104, 42. டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 166. அனைத்து டி20-க்களிலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 134.24.

இதற்கு முன்னர் அவர் நின்று ஆடும் வீரராகவே கருதப்பட்டார், ஆனால், இந்த சீசனில் அவரது ரோலே வேற என்று ஆகிவிட்டது. அன்று வெய்ன் பார்னெலை சிக்ஸ் விளாசி சதம் எடுத்ததோடு ஆர்சிபியையும் பிளே ஆஃபிலிருந்து வெளியேற்றிய விதம் மெஜஸ்டிக் என்பதோடு, ஷுப்மன் கில் தன் ஆட்டத்தை மாற்றி விட்டார் என்பது நன்றாகவே தெரிந்தது.

இந்த முறை அடித்த 23 சிக்சர்களில் 8 சிக்சர்கள் அன்று ஆர்சிபிக்கு எதிராகவே அடிக்கப்பட்டது. அதாவது இவரது ஆட்டத்தில் என்ன விரிவு படுத்தியுள்ளார் என்றால் முன்னால் தரையோடு தரையாக அடித்த ஷுப்மன் கில் இப்போது அதே ஷாட்களைத் தூக்கி அடிக்கிறார். இவர் அடித்த 23 சிக்சர்களில் 7 மிட் ஆன் மீதும், 4 மிட் ஆஃப் மீதும் 7 மிட்விக்கெட் மீதும் விளாசப்பட்டது என்கிறது கிரிக் இன்போ புள்ளிவிவரங்கள். அதேபோல் பவுண்டரிகளிலும் ஷுப்மன் கில் இந்த சீசனில் 3-வது இடத்தில் இருக்கிறார். தன் இஷ்டத்திற்கு ஷுப்மன் கில்லால் களவியூகத்தை ஊடுருவிக்கொண்டு அடிக்க முடிகின்றது.

அதுவும் ஷுப்மன் கில்லின் அந்த பேக்ஃபுட் பஞ்ச் பார்க்கவே அழகு. புல், ஹூக் ஷாட்கள் வேறு விதங்களில் ஷுப்மன் கில் பேட்டிங்கிற்கு அழகு சேர்க்கின்றது. முன்னால் சிக்சர்கள் அடிக்கக் கூச்சப்படுவார், ஆனால் இப்போதெல்லாம் சிக்சர்களை விளாச அடிக்கடி அவர் முயற்சி செய்கிறார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் 37 பந்துகளில் 68 ரன்கள் விளாசிய பிறகே முதல் நான்கு ரன்களுக்குரிய பவுண்டரியை அடித்தார் என்றால் அவரது சிக்சர் ஹிட்டிங் திறன் நமக்கு இப்படியாகத் தெரியவருகின்றது. இதே இன்னிங்சில் 94 நாட் அவுட்டில் 2 பவுண்டரிகள்தான் அடித்தார். ஆனால் 7 சிக்சர்கள். இவரது ஆட்டத்தில் இந்த மாற்றம்தான் இந்த ஐபிஎல் சீசனில் அவரை 2 சதங்களை விளாச வைத்துள்ளது.

சச்சின், கோலி போன்றோர் ரிஸ்க் எடுத்து ஆடப்பயப்படுவார்கள், ஆனால், ஷுப்மன் கில் ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தின் புள்ளி விவரங்களின்படி இந்த ஐபிஎல் சீசனில் ஷுப்மன் கில் 75 முறை பந்தைத் தூக்கித்தான் அடித்துள்ளார்.

ஆகவே, ஷுப்மன் கில்லின் இந்தப் புதிய மாற்றம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x