Published : 25 May 2023 07:02 AM
Last Updated : 25 May 2023 07:02 AM

‘ஓய்வு முடிவை எடுக்க கால அவகாசம் உள்ளது’ - மனம் திறக்கும் தோனி

தோனி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தகுதி சுற்று-1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதுமட்டும் அல்லாமல் குஜராத் அணியை முதன்முறையாக வீழ்த்தி சாதனையும் படைத்தது சிஎஸ்கே. போட்டி முடிவடைந்ததும் சிஎஸ்கே கேப்டன் தோனி தனது எதிர்கால திட்டங்கள், அணி கட்டமைக்கப்படும் விதம், வீரர்கள் எந்த முறையில் வார்த்தெடுக்கப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை போட்டி ஒளிபரப்பாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளீர்கள். இதை மற்றொரு ஆட்டம் என்பது போன்றுதான் உணர்கிறீர்களா?

ஐபிஎல் மிகப் பெரிய தொடர். எட்டு முன்னணி அணிகள் விளையாடிய நிலையில், தற்போது 10 அணிகளாக மாறி உள்ளது தொடரை மேலும் கடினமாக்கி உள்ளது. உலகில் உள்ள சிறந்த வீரர்களுடன் போட்டியிடும் போது தொடர் கடினமாகவே இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. இதனால் இது இன்னொரு இறுதிப் போட்டி என்று கூறமாட்டேன். வீரர்கள் இரண்டு மாதங்களுக்கு மேலாக கடினமாக உழைத்துள்ளார்கள். அதனால்தான் இங்கே இந்த இடத்தில் இருக்கிறோம்.

தனிப்பட்ட வீரர்கள் பல குணாதியசங்களை காட்டினர். நாங்கள் தொடரை தொடங்கிய விதத்தில் இருந்து இப்போது நாங்கள் இருக்கும் இடம் வரை அணியில் உள்ள அனைவரும் பங்களிப்பை வழங்கி உள்ளதாகவே கருதுகிறேன். பேட்டிங்கில் மிடில் ஆர்டருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் இடையில் அனைவருக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது, அவர்கள் அதை சிறப்பாகவும் செய்திருக்கிறார்கள்.

பிரபலம் இல்லாத இளம் வேகப்பந்து வீச்சாளர்களை திறன் மிக்க வீரர்களாக மாற்றுகிறீர்கள். இதற்காக சிஎஸ்கே செய்வது என்ன?

நாங்கள் அணிக்குள் ஒரு சூழலை உருவாக்க முயற்சிப்போம். இதுதவிர வேகப்பந்து வீச்சாளரின் பலம் என்ன என்பதை வலியுறுத்தி கூறுவோம். அத்துடன் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய பகுதியில் முன்னேற்றம் அடைவதை உறுதி செய்வோம்.

புதிய பந்தில் வீசுவதை காட்டிலும் அதில் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். பந்து ஸ்விங் ஆகாத நேரங்களில், நிலைமை சாதகமாக இல்லாத நேரங்களில் இரு பீல்டர்களுடன் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேனுக்கு எங்கே பந்துவீசலாம் மற்றும் எந்த பீல்டை வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் இங்கு எழும் கேள்வி. ஒரு பந்து வீச்சாளர் இதை அறிந்தால், வெற்றிகரமாக செயல்படுவார்.

நாங்கள் முடிந்தவரை அவர்களை ஊக்குவிக்க முயற்சிக்கிறோம். அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறோம், ஆட்டத்தின் சூழலையும், பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டையும் அறிந்து அதற்கு தகுந்த விதத்தில் பந்து வீசுமாறு கூறுவோம். மேலும் மற்ற பந்து வீச்சாளர்கள் எவ்வாறு பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக வீசுகிறார்கள் என்பதையும் கவனிக்கும்படி கேட்டுக்கொள்வோம்.

உதவி பயிற்சியாளர்கள் பந்து வீச்சாளர்களுடன் எப்போதும் இருக்கிறார்கள். இப்போது, டுவைன் பிராவோ, எரிக் சைமன்ஸ் உள்ளார்கள். பந்து வீச்சாளர்களுக்கு உதவக்கூடிய நிறைய பேர் இருக்கிறார்கள். முடிவில் வீரர்கள் எழுந்து நிற்கும் போது, அவர்கள் தாங்களாகவே இருக்கிறார்கள். இது மிகவும் தனிமையான இடம். ஆனால் அங்குதான் வீரர்கள் தைரியமாகவும், துணிச்சலாகவும் இருக்க முடியும்.

சேப்பாக்கத்தில் மீண்டும் விளையாடுவீர்களா?

சேப்பாக்கத்தில் மீண்டும் விளையாடுவேனா என்பது தெரியவில்லை. ஆனால் இதில் முடிவு எடுப்பதற்கு 8 முதல் 9 மாத கால அவகாசம் உள்ளது. மினி ஏலம் டிசம்பர் மாதத்தில் இருக்கலாம். அதற்குள் ஏன் தலைவலியை ஏற்றிக் கொள்ள வேண்டும். முடிவெடுக்க எனக்கு போதிய அவகாசம் உள்ளது. நான் எப்போதும் சிஎஸ்கேவுடன் இருப்பேன், அது விளையாடும் வடிவத்தில் இருந்தாலும் சரி அல்லது வெளியில் எங்காவது உட்கார்ந்திருந்தாலும் சரி.

இதில் எது நிகழும் என எனக்கு உண்மையில் தெரியாது. நான் நான்கு மாதங்களாக வீட்டை விட்டு வெளியே இருக்கிறேன். ஜனவரி 31 நான் வீட்டை விட்டு வெளியே வந்து, என் வேலையை முடித்து அதன் பின்னர் மார்ச் 2 அல்லது 3 முதல் பயிற்சியை ஆரம்பிப்பேன். இதற்கு நிறைய நேரம் எடுக்கும், ஆனால் முடிவெடுக்க எனக்கு போதுமான நேரம் உள்ளது.

கேப்டன்சி, பீல்டிங் அமைப்பு நினைக்கும் போது நாம் நினைத்தபடி அனைத்தும் நிகழ்ந்துள்ளது என்று கருதியது உண்டா?

அப்படி கருத முடியாது. நீங்கள் ஆடுகளத்தை பார்க்கிறீர்கள், ஆட்டத்தின் சூழ்நிலைகளை பார்க்கிறீர்கள், அதற்கு தகுந்தவாறு பீல்டிங்கை சரி செய்ய வேண்டும். நான் வீரர்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும் கேப்டனாகவே இருக்க முடியும், ஏனென்றால் ஒவ்வொரு முறையும் பீல்டரை ஒன்று அல்லது இரண்டு அடி இங்கும் அங்கும் மாற்றுவேன்.

பீல்டர் என் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். நீங்கள் பீல்டிங் செய்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள், ஒவ்வொரு இரண்டு பந்துகள் அல்லது மூன்று பந்துகளுக்கு ஒரு முறை நான், இரண்டு அடி உனது வலப்புறம், மூன்று அடி உனது இடப்புறம் என உங்களை மாற்றினால் அது உங்களுக்கு எரிச்சலூட்டும்.

நான் எப்போதும் என் உள்ளுணர்வை நம்புகிறேன். ஆடுகளத்தை நான் பார்க்கிறேன். மேலும் எந்த லைனில் பந்து வீசப்படுகிறது, உண்மையில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து நான் பார்க்கிறேன், அது பலனைத் தருகிறது. ஃபீல்டர்களிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள் என் மீது பார்வையை வையுங்கள் என்பதுதான். நீங்கள் ஒரு கேட்சை கைவிட்டாலும், எந்த எதிர்வினையும் இருக்காது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x