Published : 31 Oct 2017 10:47 AM
Last Updated : 31 Oct 2017 10:47 AM

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு 2-வது வெற்றி; சீனாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

காஹமிகஹராமகளிர் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.

8 அணிகள் கலந்து கொண்டுள்ள மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கித் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் 10-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியிருந்தது.

இந்நிலையில் இந்திய அணி நேற்று தனது 2-வது ஆட்டத்தில் சீனாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணித் தரப்பில் குர்ஜித் கவுர், நவ்ஜோத் கவுர், நேஹா கோயல், கேப்டன் ராணி ராம்பால் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

முதல் கால் பகுதியில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய வீராங்கனைகள் அதனை கோலாக மாற்றத் தவறினர். 2-வது கால் பகுதி தொடங்கிய 4-வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோலை அடித்தது. 19-வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் அடித்த பீல்டு கோலால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 3-வது கால் பகுதியின் தொடக்கத்தில் நவ்ஜோத் கவுர், கோல் அடித்து அசத்தினார்.

பெனால்டி வாய்ப்புகள்

38-வது நிமிடத்தில் தற்காப்பு ஆட்டத்தில் இந்திய அணி செய்த தவறால் சீனாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணி வீராங்கனை குயிஷியா கோல் அடித்தார். இதையடுத்து சமநிலையை ஏற்படுத்த அந்த அணி வீராங்கனைகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் இந்திய வீராங்கனைகளின் தடுப்பாட்டம் அதற்கு அனுமதிக்கவில்லை.

49-வது நிமிடத்தில் இந்திய அணி 3-வது கோலை அடித்தது. பெனால்டி கார்னர் மூலம் இந்த கோலை நேஹா கோயல் அடித்தார். கடைசி 10 நிமிடங்கள் எஞ்சிய நிலையில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டது. இதில் இந்திய அணிக்கு இரு பெனால்டி கார்னர் வாய்ப்பும், சீன அணிக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் இரு அணிகளுமே அவற்றை கோலாக மாற்றத் தவறியது.

2-வது வெற்றி

ஆட்டம் முடிவடைய 2 நிமிடங்கள் எஞ்சிய நிலையில் இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் அற்புதமாக பீல்டு கோல் அடித்தார்.

முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்று தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று மலேசியாவுடன் மோதுகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x