

புதுடெல்லி: சமூக வலைதளங்களில் கில்லின் சகோதரியை ஆபாசமான முறையில் விமர்சித்தவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யுமாறு டெல்லி மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
குஜராத் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் சின்னசாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கடைசி லீக் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது.
பெங்களூரு தோல்வி அடைந்த காரணத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நான்காவது அணியாக நுழைந்துள்ளது.
இந்த நிலையில் பெங்களூரு அணியின் தோல்விக்கு குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடி சதம் அடித்த கில்தான் காரணம் என சமூக வலைதளங்களில் ஆர்சிபி ரசிகர்கள் வசைபாடினர்.சிலர் ஆபாசமான முறையில் தங்களது கருத்துகளை பதிவிட்டனர்.
கில் மட்டுமல்லாது அவரது சகோதரியான ஷா நீலையும் ஆர்சிபி ரசிகர்கள் விமர்சித்தனர்.
ஆர்சிபி அணியின் தோல்விக்குப் பிறகு இன்ஸ்டாவில் ஷா நீல் ”என்ன ஒரு முழுமையான நாள்” என்று குஜராத் - பெங்களூர் கிரிக்கெட் போட்டியை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அவரது இன்ஸ்டா பக்கத்திற்கு ஆர்சிபி ரசிகர்கள் படையெடுத்தனர்.
அவரை விமர்சித்து அவரது புகைப்படங்களின் கீழ் ஆர்பிசி ரசிகர்கள் மோசமாக பதிவிட தொடங்கினர்.அவரது குடும்பத்தையும் விமர்சித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சுமன் கில்லின் சகோதரிக்கு சமூகவலைதளத்தில் பாலியல் துன்புறுத்தல் மிரட்டல் விடுத்தவர்கள் மீது ஹெப்ஐஆர் பதிவு செய்ய டெல்லி மகளிர் ஆணையம் போலீஸாருக்கு வலியுறுத்தியுள்ளது.
மேலும் இவ்விவகாரத்தில் டெல்லி போலீஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை வெளியிடுமாறு கேட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கில்லின் சகோதரி ஷா நீல் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார். மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர் தாக்கப்பட்டார். சமூக ஊடகங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் அச்சுறுத்தப்பட்டார், இது முற்றிலும் குற்றச் செயலாகும். இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிந்து அதன் நகலையும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளையும் அறிக்கையாக அளிக்க வேண்டும்” என்றார்.