

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 16-வது ஓவரை வீசுவதற்கு முன்னர் ஆட்டத்தை சில நிமிடங்கள் நிறுத்தியது.
அந்த சமயத்தில் கேப்டன் தோனி மற்றும் சென்னை அணி வீரர்கள் கள நடுவர்களுடன் கலந்து பேசி இருந்தனர். அப்போது கடைசி 5 ஓவர்களில் குஜராத் அணியின் வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டது. தீபக் சஹார், மஹீஷ் தீக்சனா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது 4 ஓவர்களை முழுவதுமாக வீசி இருந்தனர். பதிரனாவுக்கு 3 ஓவர் மற்றும் துஷார் தேஷ்பாண்டேவுக்கு 2 ஓவர்கள் எஞ்சி இருந்தன.
அதனால் தோனி, 16-வது ஓவரை வீசும்படி பதிரனாவை அழைத்தார். ஆனால், கள நடுவர்கள் கிறிஸ் கஃபேனி மற்றும் அனில் சவுத்ரி அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஏனெனில், அதற்கு முன்னர் சுமார் 9 நிமிடங்கள் பதிரனா, களத்துக்கு வெளியில் இருந்ததாக தெரிகிறது. இது ஐபிஎல் ஆட்ட விதிகளில் அடங்கும். விதி எண் 24.2.3-ன் படி ஒரு வீரர் 8 நிமிடங்களுக்கு மேல் ஆட்டத்தின்போது களத்துக்கு வெளியில் இருந்தால் அவர் நேரடியாக போட்டியில் பந்து வீச முடியாது. அவர் வெளியில் இருந்த நேரத்தை களத்தில் மீண்டும் செலவிட்ட பிறகே பந்து வீச அனுமதிக்கப்படுவார்.
அதனால் தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்கள் நடுவருடன் பேசினர். அதோடு ஆட்டத்தையும் சில நிமிடங்கள் நிறுத்தி இருந்தனர். நடுவர்களுடன், சிஎஸ்கே வீரர்கள் என்ன பேசினார்கள் என தெரியவில்லை. இருந்தும் 4 நிமிடங்களுக்கு பிறகே ஆட்டம் தொடர்ந்தது. அந்த ஓவரை பதிரனா வீசி இருந்தார்.