Published : 24 May 2023 10:09 AM
Last Updated : 24 May 2023 10:09 AM
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. குஜராத் அணிக்கு எதிரான முதல் குவாலிபையர் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இதற்கு முக்கியக் காரணம் சிஎஸ்கே அணியின் பவுலர்கள் வீசிய டாட் பந்துகள்தான்.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் விரட்டியது. இருந்தும் 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது அந்த அணி. நடப்பு சீசனில் இந்த ஒரு போட்டியில் மட்டும் தான் ஆல் அவுட் ஆகியுள்ளது குஜராத் அணி என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 போட்டிகளில் பவுண்டரிகளுக்கு அறவே பஞ்சம் இருக்காது. பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் மிகவும் அதிகம் இருக்கும். ஆனாலும் நேற்றைய போட்டியில் குஜராத் பேட்ஸ்மேன்களுக்கு டாட் பந்துகள் அதிகம் வீசி இம்சித்தனர் சென்னை அணி பவுலர்கள். அதுவே குஜராத் வீரர்களுக்கு ஆட்டத்தில் அழுத்தமும் கொடுத்தது.
மொத்தம் 50 டாட் பந்துகளை வீசி இருந்தனர் சென்னை அணி பவுலர்கள். இதில் ஜடேஜா மட்டுமே அதிகபட்சமாக தனது 4 ஓவர்களில் மொத்தமாக 12 டாட் பந்துகளை வீசி இருந்தார். சென்னை அணி வீசிய இந்த டாட் பந்துகள் தான் ஆட்டத்தில் குஜராத் வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
சென்னை பவுலர்கள் வீசிய டாட் பந்துகள்
ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரங்கள்: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமை முயற்சியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ புதிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், சென்னை மற்றும் குஜராத் இடையிலான முதல் குவாலிபையர் போட்டியில் பவுலர்கள் வீசிய ஒவ்வொரு டாட் பாலுக்கும் ஸ்கோர் கார்டில் புள்ளிக்குப் பதிலாக ‘எமோஜி’ வடிவில் மரத்தை குறிக்கும் வகையிலான சின்னம் காட்டப்பட்டது. நடப்பு சீசனுக்கான பிளே ஆஃப் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரங்களை நட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதை வெளிப்படுத்தும் விதமாகவே, நேற்றைய போட்டியில் இரு அணிகள் தரப்பிலும் டாட் பந்து வீசப்படும் போது அவை கிரீன் டாட் பால்களாக கணக்கிடப்பட்டன. நேற்றைய போட்டியில் சென்னை அணி வீசிய 50 டாட் பந்துகளுக்கு மொத்தம் 25 ஆயிரம் மரங்கள் நடப்பட உள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் குஜராத் அணி பவுலர்கள் 34 டாட் பந்துகள் வீசப்பட்டது. மொத்தம் 84 டாட் பந்துகளுக்கு 42 ஆயிரம் மரங்களை பிசிசிஐ வைக்க உள்ளது.
#CSK make it to the #TATAIPL final yet again after a clinical finish against the defending champions #GTvCSK #IPLonJioCinema #Yellove #IPL2023 #Qualifier1 | @ChennaiIPL pic.twitter.com/vuQE6C4UOd
— JioCinema (@JioCinema) May 23, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT