

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், விராட் கோலி அது குறித்து நெகிழ்ச்சியான ட்வீட் செய்துள்ளார். இதில் ஆர்சிபி அணியை ஆதரித்த ரசிகர்களுக்கு தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் ஐபிஎல் சீசன் தொடங்கும் போதும், நடைபெறும் போதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்ல வேண்டும் என அந்த அணியின் கோடான கோடி ரசிகர்கள் விரும்புவார்கள். ‘ஈ சாலா கப் நம்தே’ என்ற முழக்கத்தையும் முன்வைப்பார்கள். ஆனாலும் 2008 சீசன் முதல் இதுவரை ஒருமுறை கூட ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அதனால் ரசிகர்களுக்கு எஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.
நடப்பு சீசனில் கேப்டன் டூப்ளசி, விராட் கோலி, மேக்ஸ்வெல், சிராஜ் போன்ற வீரர்கள் ஆர்சிபி அணிக்காக சிறப்பான செயல்பாட்டை கொடுத்தனர். ஆன போதும் அந்த அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது.
“மறக்க முடியாத தருணங்களை கொண்டுள்ள சீசன். இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக நமது இலக்கை நம்மால் அடைய முடியாமல் போனது. அது ஏமாற்றம் தான். இருந்தாலும் நம் தலையை உயர்த்தி பிடிப்போம். ஒவ்வொரு படியிலும் அணியை ஆதரித்த மெய்யான ரசிகர்களுக்கு நன்றி” என விராட் கோலி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.