

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ‘வாழ்வா சாவா’ ஐபிஎல் லீக் போட்டியில் விராட் கோலி, ஆர்சிபி அணிக்கு தன் சதம் மூலம் ஒரு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இருந்தாலும் இளம்புயல் சுப்மன் கில், ஒரு படி மேலே போய் அதிரடியில் இறங்க, குஜராத் வெற்றி பெற்றது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய இருந்த ஆர்சிபி வெளியேறியது. ஆனால், கோலி தன் சதம் பற்றி வர்ணிக்கையில், ‘நிறைய பேர் என்னுடைய டி20 கிரிக்கெட் கேரியர் அவ்வளவுதான் என்றார்கள். ஆனால், அது அப்படியல்ல என நான் நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் 197 ரன்களை ஆர்சிபி எடுத்தது. இருந்தும் இந்த ரன்களை வெற்றிகரமாகத் தடுக்க தவறியது ஆர்சிபி. காரணம் அந்த அணியின் மோசமான பவுலிங் தான். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் சதம் எடுப்பது முக்கியமல்ல. எந்த அணியாக இருந்தாலும் டாப் 5 பேட்டர்கள் 20 பந்துகள் ஆடி, 40 ரன்களை எடுக்க வேண்டும். அதில் ஓரிருவர் தோல்வி அடைந்தாலும் குறைந்தபட்சம் 3 வீரர்கள் 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்கள் என்றாலே 10 ஓவர்களில் 120 ரன்கள் வந்து விடும். மீதி இருப்போர் பவுலிங் மட்டுமே போடுபவர்களை நீக்கிவிட்டாலும் முதல் 5 பேட்ஸ்மேன்களில் மூவர் 20 பந்துகளில் 40 எடுக்கின்றனர் என்றால், மீதி இருவர் ஆளுக்கு 10 பந்துகளில் 15 அல்லது 20 ரன்களுக்கு மேல் எடுக்கிறார்கள் என்றாலே அணியின் ரன் 160+ ரன்களை சர்வசாதாரணமாக கடந்து விடும். ஆனால், பெங்களூரு அணி நேற்றைய போட்டியில் அதை செய்ய தவறியது. விக்கெட்கள் ஒருபக்கம் சரிந்தாலும் நிலைத்து ஆடினார் கோலி.
அவர் பார்முக்கு வருவது இந்திய அணிக்கு நல்லது. அதுவும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஒருநாள் உலகக் கோப்பை போன்ற மிக முக்கிய தொடர்கள் நடப்பு ஆண்டில் நடக்க இருக்கும் பட்சத்தில் கோலியின் பார்ம் மிக முக்கியம் என்ற அளவில் அவரது ஐபிஎல் சதங்கள் அவருக்கும், இந்தியாவுக்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.
“நான் உண்மையில் இதை பெரிய விஷயமாக பார்க்கிறேன். எனது டி20 கிரிக்கெட் கேரியர் வீழ்ச்சியடைகின்றது, சரிவுப் பாதையில் செல்கிறது என்றனர். ஆனால், அப்படி ஒருபோதும் நான் கருதியதில்லை. நான் எனது சிறந்த டி20 கிரிக்கெட்டை ஆடி வருகிறேன் என்றே நினைக்கிறேன். நான் உண்மையில் மகிழ்வுடன் ஆடுகின்றேன். பந்துகளை சரியான இடம் பார்த்து அடிப்பதையும், பவுண்டரிகளை ஸ்கோர் செய்வதிலும், கடைசியில் வாய்ப்பிருந்தால் ஒன்றிரண்டு பெரிய ஷாட்கள் ஆடுவதிலும் விருப்பமுடையவனாக இருக்கிறேன். பேட்டிங்கில் உண்மையில் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன்” என்றார்.