Published : 22 May 2023 07:48 AM
Last Updated : 22 May 2023 07:48 AM

கேமரூன் கிரீன் அபார சதம்: ஹைதராபாத் அணியை வீழ்த்தியது மும்பை

கேமரூன் கிரீன்

மும்பை: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாததால் எந்தவித அழுத்தமும் இன்றி விளையாடியது. அதே நேரத்தில் மும்பை அணி இந்த ஆட்டத்தில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நிகர ரன் விகிதத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற அழுத்தத்துடன் களமிறங்கியது.

முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அறிமுக வீரர் விவ்ராந்த் சர்மா 47 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 46 பந்துகளில் 83 ரன்களை விளாசினார்.

பின்னர் வந்த ஹெய்ன்ரிச் கிளாசன் 19, கிளென் பிலிப்ஸ் 1, ஹாரி புரூக் 0 ரன்னில் நடையைக் கட்டினர். கேப்டன் எய்டன்மார்க்ரம் 13 ரன்களும், சன்வீர் சிங் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் ஆகாஷ் மத்வால் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது.

11.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டினால், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விட கூடுதலான நிகர ரன் விகிதத்தை மும்பை அணி பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் நிகர ரன் விகிதம் குறித்து கவலைப்படாமல் மும்பை அணி வீரர்கள் விளையாடினர்.

தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 14 ரன்களில் புவனேஸ்வர் பந்தில் வீழ்ந்தார். அரை சதமடித்த நிலையில் ரோஹித் ஆட்டமிழந்தார். 37 பந்துகளில் 56 ரன்களை (8 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) அவர் எடுத்திருந்தார். பின்னர் 3-வது விக்கெட்டுக்கு கிரீனுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ்,சிறப்பாக விளையாடினார். மறுமுனையில் சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்ட கிரீன் ஐபிஎல் போட்டியில் தனது முதலாவது சதத்தை எட்டினார். 18 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. கிரீன் 100 ரன்களும் (47 பந்துகள், 8 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்), சூர்யகுமார் யாதவ் 25 ரன்களும் (16 பந்துகள்) எடுத்து ஆட்டமிழக்கால் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இருந்தபோதும் பெங்களூரு, குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியின் முடிவைப் பொறுத்தே எந்த அணி பிளே ஆஃப் சுற்றில் நுழையும் என்பது முடிவாகும்.

ஐபிஎல் அறிமுக போட்டி: விவ்ராந்த் சர்மா சாதனை

ஐபிஎல் அறிமுகப் போட்டியில் 69 ரன்கள் குவித்து 15 ஆண்டு சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் விவ்ராந்த் சர்மா முறியடித்துள்ளார்.

இதன் மூலம் ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு வந்தார் விவ்ராந்த். இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்வப்னில் அஸ்நோட்கர் 2008-ம் ஆண்டில் அறிமுகமானபோது 60 ரன்கள் குவித்திருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x