Published : 21 May 2023 05:29 AM
Last Updated : 21 May 2023 05:29 AM

ஹைதராபாத்துடன் இன்று மோதல் - பெரிய அளவிலான வெற்றியை எதிர்நோக்கும் மும்பை

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2016-ம் ஆண்டு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. அதேவேளையில் மும்பை 13 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றுபட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் மும்பை அணிக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. சொந்த மண்ணில் அந்த அணி பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்து நிகர ரன் ரேட்டை அதிகரித்துக்கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது மும்பையின் நிகர ரன் ரேட் -0.128 ஆக உள்ளது.

14 புள்ளிகளுடன் உள்ள ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் நிகர ரன் ரேட் 0.180 ஆக இருக்கிறது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இரவு, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி 16 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்யும். மும்பை அணி, ஹைதரபாத்தை வென்றால் அந்த அணியும் 16 புள்ளிகளை அடையும். இந்த சூழ்நிலை உருவானால் நிகர ரன் ரேட் முக்கியம் வகிக்கும். ஒருவேளை மும்பை அணி தனது ஆட்டத்தில் வெற்றி பெற்று, பெங்களூரு அணியானது குஜராத்திடம் வீழ்ந்தால் மும்பை பிளே ஆஃப் சுற்றுக்குள் எளிதாக நுழைந்துவிடும்.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி கடந்த இரு ஆட்டங்களிலும் வாய்ப்பை வீணடித்தது. குஜராத் அணிக்கு எதிரானஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் அந்த அணியை அதிக ரன்கள் சேர்க்க அனுமதித்தது. அதேவேளையில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்களில் வெற்றியை தவறவிட்டிருந்தது. சொந்த மைதானத்தில் நடைபெறும் ஆட்டங்களில் மும்பை பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களை தாரைவார்ப்பது பலவீனமாக உள்ளது. இந்த சீசனில் வான்கடே மைதானத்தில் மும்பைக்கு எதிராக 4 முறை எதிரணிகள் 200 ரன்களுக்கு மேல் விளாசி உள்ளன. இது துரத்தலின் போது மும்பை அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் அழுத்தத்தை கொடுக்கிறது.

அதிலும் இறுதிக்கட்ட ஓவர்களில் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் தடுமாறுகின்றனர். இதற்கு இன்றைய ஆட்டத்தில் தீர்வு காண மும்பை அணி முயற்சி செய்யக்கூடும். பெரிய அளவிலான வெற்றியை எதிர்நோக்கி உள்ளதால் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், நேஹால் வதேரா, டிம் டேவிட் ஆகியோரிடம் இருந்து சிறந்த பேட்டிங் வெளிப்படக்கூடும்.

5 ஆட்டங்களில் ஒற்றை இலக்கத்திலும், 2 ஆட்டங்களில் ரன் சேர்க்காமலும் ஆட்டம் இழந்துள்ள கேப்டன் ரோஹித் சர்மா கடந்த இரு ஆட்டங்களில் 18 பந்துகளில் 29 ரன்களும் 25 பந்துகளில் 37 ரன்களும் சேர்த்திருந்தார். இன்றைய ஆட்டத்தில் அவரிடம் இருந்து சிறந்த இன்னிங்ஸ் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால் அழுத்தம் இல்லாமல் செயல்படக்கூடும். கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த ஹெய்ன்ரிச் கிளாசன், மும்பை பந்து வீச்சாளர்களுக்கு சவால் தரக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x