Published : 21 May 2023 05:32 AM
Last Updated : 21 May 2023 05:32 AM
புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி.
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 3 விக்கெட்கள் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது. டேவன் கான்வே 52 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 87 ரன்களும் ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 79 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.3 ஓவர்களில் 141 ரன்களை வேட்டையாடியது. ஷிவம் துபே 9 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் 22 ரன்கள் விளாசினார். ரவீந்திர ஜடேஜா 7 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களும் தோனி 4 பந்துகளில் 5 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
224 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தனிநபராக போராடிய கேப்டன் டேவிட் வார்னர் 58 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் சேர்த்து பதிரனா பந்தில் ஆட்டமிழந்தார்.
பிரித்வி ஷா 5, பில் சால்ட் 3, ரீலிரோசோவ் 0, யாஷ் துல் 13, அக்சர் படேல்15, அமன் ஹக்கிம் கான் 7, லலித் யாதவ்6, குல்தீப் யாதவ் 0 ரன்னில் நடையை கட்டினர். சிஎஸ்கே சார்பில் தீபக் சாஹர் 3விக்கெட்களை வீழ்த்தினார். தீக்சனா,பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணியானது 17 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்து பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றில் கால்பதிப்பது இது 12-வது முறையாகும்.
வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியதாவது: வெற்றிக்கான செய்முறை எதுவும் இல்லை, முயற்சி செய்து சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அணியில் சிறந்த இடத்தை வழங்க வேண்டும். அவர்கள் வலுவாக இல்லாத பகுதிகளை கண்டறிந்து அதில் அவர்களை வளர்ச்சி காண செய்ய வேண்டும். மேலும் அணிக்காக யாராவது தங்கள் இடத்தை தியாகம் செய்ய வேண்டும். அணி நிர்வாகத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறன். அவர்கள் எப்போதும் எங்களை ஆதரிக்கிறார்கள். ஆனால், வீரர்கள் மிக முக்கியமானவர்கள், வீரர்கள் இல்லாமல் நாம் எதுவும் செய்ய முடியாது. ஆட்டத்தின் இறுதி பகுதியில் பந்துவீசுவதற்கு தன்னம்பிக்கை மிக முக்கியம் என்று நினைக்கிறேன். துஷார் தேஷ்பாண்டே அழுத்தத்தின் கீழ் செயல்படக்கூடியவர் என்பதால் வளர்ச்சி அடைந்துள்ளார். இப்போது அவருக்கு நம்பிக்கை உள்ளது.
தொடர்ந்து அதே வீரர்களுடன் விளையாடும்போது, அது உதவுகிறது. பந்து வீச்சாளர்களும் பொறுப்பேற்றுள்ளனர் என்று நான் நினைக்கிறேன், பதிரனா இறுதி பகுதியில் பந்து வீசுவது மிகவும் இயல்பானது. ஆனால் இந்த விஷயத்தில் தேஷ்பாண்டே முன்னேற்றம் கண்டுள்ளார். தனிப்பட்ட செயல்திறனைப் பற்றி கவலைப்படாமல் அணிக்காக சிறப்பாகச் செயல்படும் வீரர்களைக் கண்டறிவது அவசியம். வீரர்கள் 10 சதவீத திறனுடன் வந்தாலும், அவர்களை அணியில் சிறப்பாகப் பொருத்துவதற்கு 50 சதவீதம் வரை சரி செய்யலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT