ஒலிம்பிக் கால்பந்து தகுதி சுற்று: கடினமான பிரிவில் இந்திய மகளிர் அணி

இந்திய அணி வீராங்கனைகள்
இந்திய அணி வீராங்கனைகள்
Updated on
1 min read

புதுடெல்லி: ஆசிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்கும் ஒலிம்பிக் கால்பந்து தகுதி சுற்றின் 2-வது கட்ட போட்டிகள் வரும் அக்டோபர் 23 முதல் நவம்பர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த சுற்றுக்கான டிரா நேற்று கோலாலம்பூரில் அறிவிக்கப்பட்டது. 12 அணிகளும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி 3-வது கட்ட தகுதி சுற்றுக்கு முன்னேறும். மேலும் 3 பிரிவிலும் 2வது இடத்தை பிடிக்கும் சிறந்த அணிகளுள் ஒன்றும் 3-வது கட்ட தகுதி சுற்றுக்குள் நுழையும். இந்த சுற்று அடுத்த ஆண்டு பிப்ரவரி 24 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும். இதில் இருந்து 2 அணிகள் 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு ஆசியாவில் இருந்து தகுதி பெறும்.

2-வது கட்ட தகுதி சுற்று தொடரில் இந்திய மகளிர் அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பலம் வாய்ந்த ஜப்பான், வியட்நாம், உஸ்பெகிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய மகளிர் அணி முதல் கட்ட தகுதி சுற்றில் கிர்கிஸ்தானை இரு முறை வீழ்த்தியிருந்தது. இருப்பினும் 2-வது கட்ட தகுதி சுற்று இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும் என கருதப்படுகிறது.

‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளில் இந்தியாவின் தரவரிசை (61-வது இடம்) மட்டுமே பின்தங்கியதாக உள்ளது. 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜப்பான் பிஃபா தரவரிசையில் 11-வது இடம் வகிக்கிறது. மகளிர் உலகக் கோப்பையில் இந்த ஆண்டு முதன்முறையாக களமிறங்க உள்ள வியட்நாம் 33-வது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 50-வது இடத்திலும் உள்ளன. ‘சி’ பிரிவு ஆட்டங்கள் அனைத்தும் உஸ்பெகிஸ்தானில் நடைபெறுகிறது. - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in