பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

மார்கஸ் ஸ்டாயினிஸ்
மார்கஸ் ஸ்டாயினிஸ்
Updated on
1 min read

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் முழுமையான நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே பிளே ஆஃப் சுற்றை நெருங்கி உள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். முதலில் பேட் செய்த லக்னோ அணி மார்கஸ் ஸ்டோயினிஸ் 47 பந்துகளில் விளாசிய 89 ரன் மற்றும் கிருணல் பாண்டியா சேர்த்த 49 ரன்கள் உதவியுடன் 177 ரன்கள் குவித்தது. 178 ரன்கள் இலக்கை விரட்டிய மும்பை அணியானது 5 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவையாக இருந்தன. அதிரடி வீரர்களான கேமரூன் கிரீன், டிம் டேவிட் களத்தில் இருந்த நிலையில் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மோஹ்சின் கான் அற்புதமாக வீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து லக்னோ அணி வெற்றியை வசப்படுத்த உதவினார். இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் சுற்றை நெருங்கி உள்ளது லக்னோ அணி.

13 ஆட்டங்களில் விளையாடி உள்ள லக்னோ 15 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் 20-ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெறும் பட்சத்தில் மற்ற அணிகளின் முடிவுகளுக்கு காத்திருக்காமல் எளிதாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்கும். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஆல்ரவுண்டரான மார்கஸ் ஸ்டாயினிஸ் கூறியதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் ஒரு உண்மையான அணி என்பதை நிரூபித்துள்ளோம், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி தேடிக் கொடுக்கக்கூடிய சூப்பர்ஸ்டார்கள் இல்லை. வெவ்வேறான நேரங்களில் வெவ்வேறு வீரர்கள் பங்களிப்பை வழங்குகிறார்கள். காயம் காரணமாக கே.எல்.ராகுலை நாங்கள் தவறவிட்டோம். ஆனால் மற்ற வீரர்கள் முன்னேறிவந்து விளையாடுகிறார்கள். கிருணல் பாண்டியா அணியை சிறப்பாக வழிநடத்துகிறார்.

கடைசி ஓவரை வீசிய மோஹ்சின் கான் ஒரு வருடமாக காயத்தால் அவதிப்பட்டார். கடந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் அவர், விளையாடவே இல்லை. இந்த சீசனிலும் அவர், ஒரே ஒரு ஆட்டத்தில்தான் விளையாடி இருந்தார். இந்த நிலையில் மோஹ்சின் கான் கடைசி ஓவரை வீசியது அவருக்கு பெரிய தருணமாக அமைந்தது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in