Last Updated : 04 Oct, 2017 10:23 AM

 

Published : 04 Oct 2017 10:23 AM
Last Updated : 04 Oct 2017 10:23 AM

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஜான்சனை போல் தாக்குதல் பந்து வீச்சை கையாள்வோம்: மிட்செல் ஸ்டார்க் நம்பிக்கை

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஜான்சனை போல் தாக்குதல் பந்து வீச்சை கையாள்வோம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான பாரம்பரிய மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 23-ம் தேதி பிரிஸ்பனில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதிலும் முக்கியமாக வேகப் பந்து வீச்சாளர்கள் முழு அளவில் தங்களை பட்டைத் தீட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் உள்ளூரில் நடைபெறும் தொடர்களில் பங்கேற்றுள்ளனர்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது காயம் அடைந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் தற்போது முழு அளவில் குணமடைந்துள்ள நிலையில் வரும் வெள்ளிக்கிழமை தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக களமிறங்க உள்ளார். இதேபோல் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோஸ் ஹசல்வுட்டும் உள்ளூர் போட்டியில் களமிறங்குவதை ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளர் டேவிட் சாகர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இவர்களுடன் இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரில் இருந்து விடுவிக்கப்பட்ட பேட் கம்மின்ஸூம் இணைய உள்ளார். இதுகுறித்து டேவிட் சாகர் கூறும்போது, “வேகப் பந்து வீச்சாளர்கள் 3 பேரும் விளையாடுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். உள்ளூர் தொடரின் ஆட்டங்களால் ஆஸ்திரேலிய அணியை வடிவமைக்க முடியும். இது அனைவருக்கும் நல்லது” என்றார்.

இதற்கிடையே 2013-14ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜான்சன் எப்படி தாக்குதல் பந்து வீச்சை தொடுத்தாரோ அதுபோன்று நாங்கள் தற்போது செயல்படுவோம் என மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “நாங்கள் உண்மையிலேயே திடமான தாக்குதல் பந்து வீச்சை பெற்றுள்ளோம். நாங்கள் ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்கிறோம்.

பேட் கம்மின்ஸ் அதிகவேக பவுன்ஸர்களை வீசக்கூடியவர், ஜோஸ் ஹசல்வுட் தொடர்ச்சியாக சரியான திசையிலும் மற்றும் சீரான நீளத்திலும் பந்துகளை வீசும் திறன் கொண்டவர். மிட்செல் ஜான்சன் எப்படி தாக்குதல் பந்து வீச்சை கையாண்டு விக்கெட்களை வீழ்த்தினாரோ அதேபோன்று இம்முறை நாங்கள் செயல்படுவோம்” என்றார்.

2013-14ம் ஆண்டு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 5-0 என கைப்பற்றியது. இந்தத் தொடரில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் 37 விக்கெட்கள் வேட்டையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x