Published : 17 May 2023 08:22 AM
Last Updated : 17 May 2023 08:22 AM

டெல்லி கேபிடல்ஸுடன் இன்று பலப்பரீட்சை: பெரிய அளவிலான வெற்றியை எதிர்நோக்கும் பஞ்சாப்

பஞ்சாப் மற்றும் டெல்லி அணி இடையிலான போட்டி

தரம்சாலா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு தரம்சாலாவில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் பெரிய அளவிலான வெற்றியை வசப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதில் பஞ்சாப் அணி முனைப்பு காட்டக்கூடும்.

ஐபிஎல் தொடரில் இந்த சீசன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரோலர் கோஸ்டர் போன்று ஏற்ற இறக்கமாக உள்ளது. 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள பஞ்சாப் சம அளவிலான வெற்றியையும் சம அளவிலான தோல்வியையும் பதிவு செய்துள்ளது. 12 புள்ளிகளுடன் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி இன்னும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான பந்தயத்தில் நீடிக்கிறது. எனினும் அந்த அணி நிகர ரன்ரேட்டை (-0.269) கணிசமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது.

இந்த சீசனில் 2-வது முறையாக பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் அந்த அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது ஷிகர் தவண் தலைமையிலான பஞ்சாப் அணி. இதனால் இன்றைய ஆட்டத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரப்சிம்ரன் சிங் சதம் அடித்திருந்தார்.

அந்த அணியில் அவருடன், ஷிகர் தவண் மட்டுமே பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரராக திகழ்கிறார். மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து பெரிய அளவிலான பங்களிப்பு இல்லாதது பலவீனமாக கருதப்படுகிறது. பந்துவீச்சில் நேதன் எலிஸ், சாம் கரண், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை உள்ளடக்கிய வேகப்பந்து வீச்சு துறை எழுச்சி பெற வேண்டும்.

டெல்லி அணியை பொறுத்தவரையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது. எனினும் கணிசமான வெற்றிகளை பெற அந்த அணி முயற்சி செய்யக்கூடும்.

அந்த அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் துறையும் இந்த சீசனில் ஏமாற்றம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்களில் அக்சர் படேலை தவிர மற்ற யாரும் சொல்லும்படியிலான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. இது ஒட்டுமொத்த அணியின் கட்டமைப்பையும் நிலைகுலைய செய்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, சர்ப்ராஸ் கான் ஆகியோரிடம் இருந்து சாதாரணமான ஆட்டம் கூட வெளிப்படவில்லை.

இதனால் டாப் ஆர்டர் பேட்டிங் வெளிநாட்டு வீரர்களை நம்பியே இருக்க வேண்டியது உள்ளது. டேவிட் வார்னர், பில் சால்ட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் சீராக ரன்கள் குவித்து நிலைத்து நின்று விளையாடினால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும் என்ற சூழ்நிலை தொடர் முழுவதும் நிலவி வருகிறது. இவர்கள் ஆட்டமிழந்தால் நடுவரிசை பேட்டிங் சரிவை நோக்கி பயணிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெறும் சூழ்நிலையில்தான் இருந்தது.

ஆனால் கடைசி 67 ரன்களுக்கு 8 விக்கெட்களை கொத்தாக தாரை வார்த்து தோல்வியின் பிடியில் சிக்கியது. பேட்டிங் சரியாக அமையாத நிலையில் பந்து வீச்சு பலமாகவே உள்ளது. டெல்லி அணி பெற்றுள்ள 4 வெற்றிகளில் 3 ஆட்டங்களில் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். அனுபவம் வாய்ந்த இஷாந்த் சர்மா, கலீல் அகமது ஆகியோர் வேகப்பந்து வீச்சில் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கும் நிலையில் சுழற்பந்து வீச்சில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x