

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி 20 தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 55, கிளென் மேக்ஸ்வெல் 54, விராட் கோலி 18 ரன்கள் எடுத்தனர். இறுதிக்கட்டத்தில் அனுஜ் ராவத் 29 ரன்கள் விளாசினார்.
172 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராஜஸ்தான் தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. முதல் ஓவரிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் மொகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். ஜாஸ் பட்லர் (0), கேப்டன் சஞ்சு சாம்சன் (4), ஜோ ரூட் (10) ஆகியோர் வெய்ன் பார்னல் பந்தில் நடையை கட்டினர்.
தொடர்ந்து தேவ்தத் படிக்கல் (4), துருவ் ஜூரல் (1) ஆகியோர் பிரேஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தனர். ஷிம்ரன் ஹெட்மயர் 35 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து ஸம்பா (0), ஆசிஃப் (0) கரண் சர்மா பந்தில் நடையை கட்ட ராஜஸ்தான் அணி 10.3 ஓவரில் 59 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதனால் பெங்களூரு அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள பெங்களூரு 12 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.
அதேவேளையில் தனது 13-வது ஆட்டத்தில் 7-வது தோல்வியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை கடினமாக்கி உள்ளது.