

பிரேசில் உலகக் கோப்பைக் கனவுடன் களமிறங்கிய நெய்மார் காயமடைந்து விலகியுள்ளதையடுத்து அவருக்கு விளையாட்டின் சகல துறைகளிலிருந்தும் ஆறுதல் மழை பொழிந்து வருகிறது.
நெய்மார் முதுகை உடைத்ததாக கொலம்பிய வீரர் சுனைகாவுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் வசைச் செய்தி வந்த வண்ணம் உள்ளன. இதில் அவருக்கு கொலை மிரட்டல் மற்றும் நிறவெறித்தாக்குதல்களும் தொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவருக்கு ஃபவுல் கொடுத்து வெளியேற்றாத ஸ்பானிய நடுவர் கார்லோஸ் வெலாஸ்கோவுக்கும் கடும் வசை மழை பொழியப்படுகிறது.
நெய்மாரின் பார்சிலோனா அணி நண்பரும் சக வீரருமான அர்ஜெண்டீனா அணியின் ஸ்ட்ரைக்கர் லயோனல் மெஸ்ஸி, தனது ஃபேஸ்புக்கில் இருவரும் பார்சிலோனா அணியின் சீருடையில் சேர்ந்து இருக்கும் படத்தை வெளியிட்டு, “நெய்மார், நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன் எனது நண்பரே” என்று பதிவிட்டுள்ளார்.
உலகின் அதிவேக மன்னன், ஜமைக்காவின் உலக சாம்பியன் உசைன் போல்ட் தனது டிவிட்டரில், “இந்தச் செய்தி வருத்தமளிக்கிறது, விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
கூடைப்பந்து நட்சத்திர வீரர் லே பிரான் ஜேம்ஸ் கூட ”என்ன மாதிரியான வீரர் நெய்மார், அவருக்கு ஏற்பட்ட காயம் பற்றிய செய்தியை வெறுக்கிறேன், விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அர்ஜெண்டீன முன்னாள் நட்சத்திரம் டீகோ மரடோனா, தனது வெனிசூலா தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூறுகையில், “நெய்மார் போன்ற வீரர் ஒருவர் விழுங்கப்பட்டு, களத்திலிருந்து தூக்கிச் செல்லப்படுவது என்ன விளையாட்டு? இந்த மாதிரி விளையாட்டில் எனக்கு உடன்பாடில்லை. அந்த ஸ்பானிய நடுவர் மிக மோசம். நான் கடந்த 10 ஆண்டுகளில் பார்த்ததில் இவர்தான் படு மோசம்” என்று கூறினார்.
சுனைகாவின் நடத்தை தற்போது ஃபிஃபா கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.