

மியாமி: 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதி தொடருக்கான மேற்கியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆல்ரவுண்டர் கீமோ பால், இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடகேஷ் மோதி ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.
ஐசிசி-யின் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கு ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் இருக்கும் அணிகளே நேரடியாக தகுதி பெற முடியும். மேற்கிந்தியத் தீவுகள் 10 இடத்தில் இருப்பதால் தகுதி சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த தகுதி சுற்று தொடர் வரும் ஜூன் 18 முதல் ஜூலை 9-ம் தேதி வரை ஜிம்பாப்வேயில் நடைபெறுகிறது. இதில் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் நேபாளம், ஓமன், ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன. இதில் இருந்து இரு அணிகள் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்னேறும். இந்நிலையில் தகுதி சுற்று தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆல்ரவுண்டர் கீமோ பால், இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடகேஷ் மோதி ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். அதே வேளையில் அதிரடி வீரரான ஷிம்ரன் ஹெட்மயர் நீக்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்: ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மன் பாவல், ஷமர் புரூக்ஸ்,யானிக் கரியா, கீசி கார்டி, ராஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹோசைன், அல்சாரி ஜோசப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோதி, கீமோ பால், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட்.