

தாஷ்கண்ட்: உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் தீபக் போரியா, முகமது ஹுசாமுதீன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 51 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் தீபக் போரியா, இரு முறை உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றபிரான்ஸின் பிலால் பென்னாமாவை எதிர்த்து விளையாடினார். இதில் தீபக் போரியா 3-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
57 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீன், கியூபாவின் சாய்டெல் ஹோா்டாவுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் முகமது ஹுசாமுதீன் காயம் காரணமாக விலகினார். கால் இறுதி சுற்றில் விளையாடிய போது முகமது ஹுசாமுதீனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருந்தது. காயம் ஏற்பட்ட இடத்தில் வீக்கமும், வலியும் இருந்ததால் முகமது ஹுசாமுதீன் அரை இறுதி சுற்றில் இருந்து விலகியதாக இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் தெரிவித்துள்ளது. அரை இறுதி சுற்றில் விலகிய 29 வயதான முகமது ஹுசாமுதீன் வெண்கலப் பதக்கம் பெறுவார்.