IPL 2023: MI vs GT | ரஷீத் கானின் சிக்சர்ஸ் ஷோ - 27 ரன்களில் மும்பை வெற்றி

IPL 2023: MI vs GT | ரஷீத் கானின் சிக்சர்ஸ் ஷோ - 27 ரன்களில் மும்பை வெற்றி
Updated on
2 min read

மும்பை: குஜராத் டைட்டன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

219 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு மும்பை பவுலர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர். ஆகாஷ் மத்வால் தனது பவுலிங்கில் குஜராத்தின் டாப் ஓப்பனிங்கை சரித்தார். சஹா 2 ரன்னிலும், ஷுப்மன் கில் 6 ரன்னிலும் அவுட் ஆக, ஹர்திக் பாண்டியா 4 ரன், விஜய் சங்கர் 29 ரன்கள் என சீரான இடைவெளியில் குஜராத் விக்கெட்டை இழந்தது.

டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி 41 ரன்களில் அவுட் ஆனார். இதன்பின் வந்த ரஷீத் கான் மும்பை பவுலர்களுக்கு பயம் காட்டினார். மட்டையை சுழற்றிய ரஷீத் மும்பையின் பந்துவீச்சை சிக்ஸர்களாக பறக்கவிட்டார். 21 பந்தில் அரைசதம் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் முதல் அரைசதம் பதிவு செய்த அவர், அதன்பின்னும் தனது அதிரடியை தொடர்ந்தார்.

கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார் இறுதிவரை அவுட் ஆகாமல் 79 ரன்கள் எடுத்திருந்தார். 31 பந்துகளை சந்தித்த ரஷீத் 10 சிக்ஸர்கள் அடித்தார். அவரின் அதிரடியால் பெரிய தோல்வியை சந்திக்க வேண்டிய குஜராத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து கவுரவமான தோல்வி அடைந்தது.

இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றிபெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மத்வால் 3 விக்கெட் வீழ்த்தினார்.

மும்பை இன்னிங்ஸ்: டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா முந்தைய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் 2 சிக்ஸர்களை விளாசி அடித்து ஆடினார். இந்த ஆட்டத்தில் அரைசதமாவது அடிப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு அதில் பாதியான 29 ரன்களைச் சேர்த்துவிட்டுச் சென்றார். அவர் அவுட்டான அதே ஓவரில் இஷான் கிஷனும் 31 ரன்களில் விக்கெட்டாக ரஷித்கானுக்கு 7ஆவது ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகள் தேறின. அடுத்து வந்த நேஹல் வதேரா போல்டானார்.

சூர்யகுமார் யாதவ் விஷ்ணு வினோத் பார்ட்னர்ஷிப் அமைக்க 15 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 151 ரன்களைச் சேர்த்திருந்தது. விஷ்ணு வினோத் 30 ரன்கள், டிம் டேவிட் 5 ரன்களிலும் கிளம்ப சூர்யகுமார் யாதவின் அதிரடியால் குஜராத் திக்குமுக்காடி போனது. 6 சிக்சர்கள் விளாசி தனது முதல் சதத்தை பதிவு செய்தார் சூர்யகுமார் யாதவ்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை 218 ரன்களைச் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 103 ரன்களுடன் கடைசிவரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். குஜராத் அணி தரப்பில் ரஷீத்கான் 4 விக்கெட்டுகளையும், மோஹித் ஷர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

2011-ம் ஆண்டுக்குப்பிறகு வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in