Published : 12 May 2023 06:46 PM
Last Updated : 12 May 2023 06:46 PM
மும்பை: நான் இந்திய தேர்வாளராக இருந்திருந்தால், ஜெய்ஸ்வாலை உலகக் கோப்பைக்கு இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன் என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 56-வது லீக் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்தப் போட்டியில் 150 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் வெற்றிகரமாக எட்டியது. அதில் 98 ரன்கள் இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது பங்களிப்பாக வழங்கி இருந்தார்.
47 பந்துகளில் இந்த ரன்களை அவர் எடுத்திருந்தார். 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் இதில் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 208.51. 21 வயதான அவர் நடப்பு சீசனில் 12 போட்டிகளில் விளையாடி மொத்தம் 575 ரன்களை அவர் எடுத்துள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடி பேட்டிங் திறன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களின் பார்வையை தன் பக்கமாக திருப்பியுள்ளார் என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஜெய்ஸ்வாலை பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரெய்னா கூறும்போது, “ நான் இந்திய தேர்வாளராக இருந்திருந்தால், ஜெய்ஸ்வால் மிகவும் புத்துணர்வுடன் இருப்பதால், அவரை உலகக் கோப்பைக்கு இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன்.
அவர் எனக்கு வீரேந்திர சேவாக்கை நினைவுபடுத்துகிறார். ரோஹித் சர்மா இதைப் பார்ப்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அவர் உலகக் கோப்பைக்காக ஜெய்ஸ்வாலை போன்ற பேட்ஸ்மேன்களைத் தேடுவார்.” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT