

சென்னை: நடப்பு சீசனில் ரிஸ்கான ஷாட் ஆடுவதற்கு ஷிவம் துபேவின் ஆட்டம் சிறந்தவொரு உதாரணம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார். தங்கள் அணி வீரர்கள் ரிஸ்கான ஷாட் ஆட தனது தரப்பில் வேண்டிய ஊக்கம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடப்பு சீசனின் 10 இன்னிங்ஸ் பேட் செய்துள்ள துபே, 315 ரன்கள் எடுத்துள்ளார். 3 அரை சதங்கள் இதில் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 159.90. நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
“எங்கள் அணி வீர்களிடம் அதிக ரிஸ்கான ஷாட் ஆடுமாறு தெரிவித்துள்ளோம். இந்த அணுகுமுறையின் மூலம் ஒரு இன்னிங்ஸை கட்டமைக்கும் முறை சற்றே மாறுபடும். எங்கள் வீரர்கள் அதை செய்வதில் எனக்கு மகிழ்ச்சி. வீரர்கள் அதிரடியாக விளையாடுவது அவசியம். சில நேரங்களில் இந்த வகை அணுகுமுறையில் தவறு நடக்கும். ஆனால், இன்னிங்ஸ் முடிவில் இந்த அதிரடியின் மூலம் ரன்களை சற்று உயர்த்த முடியும்.
அதிக ரிஸ்கான ஷாட் ஆடுவதற்கு துபேவின் ஆட்டம் சிறந்தவொரு உதாரணம். அவருக்கு அடுத்து அணியில் ராயுடு மற்றும் தோனி ஆகியோர் அந்த பணியை செய்கின்றனர். இது டி20 கிரிக்கெட் எப்படி விளையாடப்படுகிறது என்பதன் பிரதிபலிப்பு என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.