

சென்னை: ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடர் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி முடிவடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் ஆட்டத்தில் அக்டோபர் 5ம் தேதி நடப்பு சாம்பியனான இங்கிலாந்தும், 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்தும் மோதக்கூடும்.
இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கலாம் என்றும், இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் அணி மோதும் ஆட்டங்கள் அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த வகையில் சென்னைக்கு கூடுதல் ஆட்டங்களை நடத்த வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதம் 2 அணிகள் தகுதி சுற்றின் வாயிலாக நுழையும். 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் முழு அட்டவணையையும் பிசிசிஐ அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.