Published : 10 May 2023 11:29 PM
Last Updated : 10 May 2023 11:29 PM
சென்னை: டெல்லி அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது
முன்னணி வீரர்கள் யாரும் 30 ரன்களை தொடவில்லை. அதிகபட்சமாக ஷிவம் துபே 25 ரன்கள், ருதுராஜ் கெய்க்வாட் 24 ரன்கள், ரகானே 21 ரன்கள், அம்பதி ராயுடு 23 ரன்கள், ஜடேஜா 21 ரன்கள், தோனி 9 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்திருந்தார்.
சென்னை அணியை பெரிய அளவில் ரன்கள் குவிக்காதவாறு தடுத்ததில் முக்கிய பங்கு மிட்செல் மார்ஷ் மற்றும் அக்சர் படேலுக்கு உண்டு. மிட்செல் மார்ஷ் 3 விக்கெட், அக்சர் பட்டேல் 2 விக்கெட் கைப்பற்றினர்.
168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆட்டத்தின் இரண்டாவது பந்தே கேப்டன் டேவிட் வார்னரை அவுட் ஆக்கி அதிர்ச்சி அளித்தார் சிஎஸ்கே பவுலர் தீபக் சஹார். மற்றொரு ஓபனர் பிலிப் சால்ட்டையும் 17 ரன்களில் வெளியேற்றி டெல்லியை நிலைகுலைய வைத்தார் தீபக் சஹார். மிட்செல் மார்ஷை செட்டில் ஆக விடாமல் ரஹானே ரன் அவுட் செய்ய 25 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது டெல்லி.
மனிஷ் பாண்டே மற்றும் ரில்லீ ரூசோவ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்க முயற்சித்தாலும் அது கைகூடவில்லை. இம்பேக்ட் ப்ளேயராக வந்த பதிரானா 27 ரன்கள் எடுத்திருந்த மனிஷ் பாண்டேவை அவுட் ஆக்க, 35 ரன்கள் எடுத்திருந்த ரூசோவ்வை ஜடேஜா வெளியேற்றினார்.
இதன்பின் வந்தவர்களில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை. அக்சர் படேல் மட்டும் 21 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு டெல்லி 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.
சென்னை தரப்பில் அதிகபட்சமாக பதிரானா 3 விக்கெட்டும், தீபக் சஹார் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT