

மும்பை: விராட் கோலி - நவின் உல் ஹக் இடையேயான விரோதப் போக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என அவர்களது ட்விட்டர் பதிவுகளை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
மும்பை வான்கடே மைதானத்தில் பெங்களூர் - மும்பை இடையே நடந்த முக்கிய போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சில நாட்களுக்கு முன்னர் பெங்களூர் - லக்னோ இடையேயான போட்டியில், லக்னோ அணியின் இளம் வீரரான நவீன் உல்ஹக்கிற்கும் பெங்களூரு அணியின் மூத்த வீரரான விராட் கோலிக்கும் இடையே வார்த்தைப் பரிமாற்றங்கள், களத்தில் வெளிப்பட்ட ஆக்ரோஷம், போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீரும் கோலியும் மோதிக்கொள்ளும் அளவுக்கு வெடித்தது.
இது கிரிக்கெட் உலகில் பெருமளவு விமர்சிக்கப்பட்டது. இந்த மோதல் முடிந்தபிறகு, நடைபெற்ற குஜராத் - லக்னோ போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் குஜராத் அணி வெற்றி பெற்றது. அப்போது விராட் கோலி குஜராத் அணி வீரர்களை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெங்களூர் - மும்பை இடையேயான நேற்றைய போட்டி நடைபெற்றபோது லக்னோ வீரர் நவீன் உல் அக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனிப்பான மாம்பழம் என குறிப்பிட்டு மும்பை அணி வீரர்களை பாராட்டும் விதமாக ஸ்டோரியை வைத்திருத்தார். இதனை ஒருமுறை செய்யவில்லை. சூரியகுமார் பெங்களூருக்கு எதிராக அதிரடியாக அடும்போது அவர் ஸ்டோரியில் மீண்டும் மாம்பழங்களை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நவீன், கோலியை மறைமுகமாக தாக்குகிறார் என நெட்டிசன்கள் சமூக வலைதலைங்களில் பதிவிட்டனர். இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் மும்பை , பெங்களூர் அணிகளுடன் நவீன் உல் அக்கும் டிரெண்ட் ஆனார்.