Published : 09 May 2023 11:19 PM
Last Updated : 09 May 2023 11:19 PM
மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
200 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் வழக்கம் போல் ஏமாற்ற துவக்கம் கொடுத்தாலும் மற்றொரு முனையில் இருந்த இஷான் கிஷன் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். பவர் பிளே ஓவர்களில் ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கியிருப்பார் போல, 20 பந்துகளில் தலா 4 பவுண்டரி, சிக்ஸர்கள் விளாசி 42 ரன்கள் சேர்த்துவிட்டு, 21 பந்தில் பவர் பிளே முடிவதற்குள்ளாகவே அவுட் ஆனார்.
முதல் விக்கெட்டாக இஷான் கிஷன் வெளியேறிய சில மணித்துளிகளில் 7 ரன்களில் ரோகித் ஷர்மாவும் நடையைக் கட்டினார். இந்த இருவரது விக்கெட்டையும் வனிந்து ஹஸரங்கா வீழ்த்தினார்.
இதன்பின்னரே மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் சூடுபிடித்தது. சூர்யகுமார் யாதவ் மற்றும் நேஹல் வதேரா இணைந்து ஆர்சிபி பவுலிங்கை கலங்கடித்தனர். இருவரும் போட்டிபோட்டு கொண்டு பந்தை எல்லைக்கோட்டுக்கு பறக்கவிட்டனர். இதனால், மும்பை அணி விரைவாகவே ரன்களை குவித்தது.
ஒருகட்டத்தில் சூர்யகுமார் யாதவ் மரண அடி அடித்தார். 26 பந்துகளில் அரைசதம் தொட்ட அவர் மேட்சை சீக்கிரமாக முடிக்கும் முயற்சியில் பந்துகளை சிக்ஸராக பறக்கவிட்டார். விஜயகுமார் வைசாக் வீசிய 16வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என அடுத்தடுத்து அதிரடி காட்டிய சூர்யா அதே ஓவரில் கேட்ச் ஆனார். 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தார் அவர். இதில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடக்கம். இதன்பின் மும்பை வெற்றிபெற 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட எளிதாக வெற்றி இலக்கை எட்டியது.
கடைசியில் ஒரு சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதிசெய்தார் நேஹல் வதேரா. அவர் இறுதிவரை அவுட் ஆகாமல் 52 ரன்கள் எடுத்திருந்தார். 3.3 ஓவர்கள் மீதமிருக்க, 4 விக்கெட்களை இழந்து 200 ரன்கள் இலக்கை எட்டி வெற்றிபெற்றது மும்பை. பெங்களூரு தரப்பில் ஹஸரங்கா மற்றும் விஜயகுமார் வைசாக் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
நடப்பு தொடரில் மும்பை பெறும் 6வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 3ம் இடத்துக்கு மும்பை முன்னேறியுள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி அடைந்துள்ளது அந்த அணி.
ராயல் சேலஞ்சர்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற மும்பை அணிந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. வழக்கமாக மும்பை அணிக்கு தொடக்கம் கொடுக்கும் ரோஹித் சர்மா முதல் ஓவரில் அவுட்டாகி வெளியேறுவார். தற்போது ஆர்சிபியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி 1 ரன்னுடன் முதல் ஓவரில் விக்கெட்டானார். அவரைத்தொடர்ந்து அனுஜ் ராவத் 6 ரன்களுடன் கிளம்பினார்.
அடுத்து வந்த ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் க்ளான் மேக்ஸ்வெல் இணை மும்பை பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தனர். 12 ஓவர் வரை இந்த இணையை பிரிக்க முடியாமல் மும்பை திக்குமுக்காடியது. ஒருவழியாக போராடி 4 சிக்சர்களுடன் 33 பந்துகளில் 68 ரன்களை குவித்த மேக்வெல்லை ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் அவுட்டாக்கினார். அடுத்து மஹிபால் லோமரோர் 1 ரன்னில் போல்டாக, டு பிளெசிஸூம் 65 ரன்களுடன் கிளம்பினார்.
17 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை சேர்த்திருந்த நிலையில், தினேஷ் கார்த்திக்கும், கேதர் ஜாதவ்வும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தினேஷ் கார்த்திக் சிக்சர் விளாசி நம்பிக்கையூட்டினாலும் 30 ரன்களில் அவசரப்பட்டு கிளம்பினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 199 ரன்களை குவித்துள்ளது.
மும்பை அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோடன், குமார் கார்த்திகேயா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT