Published : 24 Sep 2017 08:09 am

Updated : 24 Sep 2017 08:09 am

 

Published : 24 Sep 2017 08:09 AM
Last Updated : 24 Sep 2017 08:09 AM

இந்தூரில் இன்று 3-வது ஒருநாள் போட்டியில் மோதல்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா - தாக்குப்பிடிக்குமா ஸ்டீவ் ஸ்மித் படை

3

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று இந்தூரில் 3-வது ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. வலுவான பந்து வீச்சை கொண்ட இந்திய அணி, தடுமாறி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றும். இதனால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வெற்றிபெறுவதற்கான வழிகளை தேடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 253 ரன்களையே இலக்காக நிர்ணயித்த போதிலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர். ஸ்விங் பந்து வீச்சில் வேறு தளத்தில் பயணிக்க தொடங்கி உள்ள புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களை எளிதில் வெளியேற்றினர். ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல் கூட்டணி நடுக்கள ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியை ஆட்டம் காண வைத்தது.

தொடரை வெல்லும் வேட்கையுடன் உள்ள இந்திய அணியின் செயல் திறனுக்கு முட்டுக்கட்டைப் போட வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது செயல் திறனை மீட்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்திய அணியில் ரோஹித் சர்மா, மணீஷ் பாண்டே ஆகியோரிடம் இருந்து இந்தத் தொடரில் இதுவரையில் பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படவில்லை. இதேபோல் சென்னையில் நடந்த ஆட்டத்தில் ஓரளவு ரன்கள் சேர்த்த கேதார் ஜாதவ், 2-வது ஆட்டத்தில் சிறந்த திறனை வெளிப்படுத்த தவறினார். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு 4-வது மற்றும் 5-வது இடத்தில் களமிறங்கும் சரியான வீரரை தேடும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ள நிலையில் மணீஷ் பாண்டே, தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்க்க தவறி உள்ளார்.

இதனால் அவர், ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி இரு ஆட்டங்களுக்கான அணி தேர்வு இன்று நடைபெறுவதால் மணீஷ் பாண்டே ரன்கள் சேர்க்க முயற்சிக்கக்கூடும் என கருதப்படுகிறது. அதுவும் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே சாத்தியப்படும். கேதார் ஜாதவ் ஏற்கெனவே தனது அதிரடியால் திறனை நிருபித்த போதிலும் தொடர்ச்சியாக ரன்கள் சேர்ப்பதிலும், நெருக்கடியான நேரத்தில் அணியை மீட்பதிலும் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார்.

முதல் ஆட்டத்தில் பேட்டிங்கிலும், 2-வது ஆட்டத்தில் பந்து வீச்சிலும் பலம் சேர்த்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். போட்டி நடைபெறும் ஹோல்கர் மைதானத்தின் எல்லைக்கோடுகள் (70 யார்டு) சிறிது என்பதால் இரு அணிகளை சேர்ந்த பேட்ஸ்மேன்கள் தாராளமாக ரன்கள் குவிக்கக்கூடும். இந்த மைதானத்தில் கடந்த ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 211 ரன்களும், அஜிங்க்ய ரஹானே 188 ரன்களும் வேட்டையாடியிருந்தனர்.

தற்போதைய தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த முடியாததற்கு ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் தொடர்ச்சியான சிறந்த செயல்பாடுகளும் ஒரு காரணம். முக்கியமாக நாதன் கோல்டர் நைல், ஆப் ஸ்டெம்புக்கு வெளியே சிறந்த நீளத்தில் பந்துகளை வீசி கடும் நெருக்கடி கொடுக்கிறார். அவரது செயல்பாடு கிளென் மெக்ராத்திடம் காணப்படும் நுணுக்கங்களை நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது.மேலும் அவருக்கு உறுதுணையாக பேட் கம்மின்ஸூம் செயல்படுகிறார்.

இந்த வேகக்கூட்டணி இரு ஆட்டங்களிலும் இந்திய பேட்ஸ்மேன்களை பெரிய அளவிலான ஷாட்களை மேற்கொள்ள விடவில்லை. அதிலும் பவர் பிளேவில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியை கவலை கொள்ள வைப்பது சுழற்பந்து வீச்சுதான். முதல் ஆட்டத்தில் அதிக ரன்களை வாரி வழங்கியதற்காக ஆடம் ஸம்பா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக 2-வது ஆட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆஷ்டன் அகரும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்திய ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படும் நிலையில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் சோபிக்காதது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனை படைத்த குல்தீப் யாதவ் சீரான வளர்ச்சி பெற்று அணி நிர்வாகத்தின் நம்பிக்கை பெற்றுள்ளார். சீனியர் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோர் விளையாடாத நிலையில் குல்தீப் யாதவும், யுவேந்திரா சாஹலும் அபார திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடுகள ஓவர்களில் யுவேந்திரா சாஹல், விக்கெட்கள் வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்துபவராக உள்ளார். போட்டி நடைபெறும் ஹோல்கர் மைதானம் ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என மைதான வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் இந்திய சுழல் கூட்டணி மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுக்க தயாராக உள்ளது.

ஆஸ்திரேலிய அணி தோல்விகளில் இருந்து மீள வேண்டுமென்றால் டேவிட் வார்னர், மேக்ஸ்வெல் ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் குவிக்க வேண்டும். காயம் காரணமாக கடந்த இரு ஆட்டத்திலும் களமிறங்காத ஆரோன் பின்ச் நேற்று வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்படக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேரம்: பிற்பகல் 1.30

நேரடி ஒளிபரப்பு:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author