IPL 2023: KKR vs PBKS | ரஸ்ஸல் அதிரடியால் கடைசி ஓவர் த்ரில்... பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா

IPL 2023: KKR vs PBKS | ரஸ்ஸல் அதிரடியால் கடைசி ஓவர் த்ரில்... பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா
Updated on
1 min read

கொல்கத்தா: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றிபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்ய கேப்டன் ஷிகர் தவான் பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தார். ஆனால் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, மற்றவர்கள் யாரும் பெரிதாக ரன்கள் சேர்க்க முடியவில்லை.

அந்த அணியின் முக்கிய வீரர்களான பிரப்சிம்ரன் சிங் 12, லியாம் லிவிங்ஸ்டோன் 15 , ஜிதேஷ் சர்மா 21, ஷாருக் கான் 21, ஹர்பிரீத் பிரார் 17, ரிஷி தவான் 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷிகர் தவான் 57 ரன்கள் சேர்த்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், ஹரிஷ் ராணா 2 விக்கெட் வீழ்த்தினர்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு கேப்டன் நிதிஷ் ராணா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு முன்னதாக ஜேசன் ராய் 38 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். ரஹ்மனுல்லா குர்பாஸ் 15 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தாலும், இறுதிக்கட்டத்தில் ரஸ்ஸல் 42 ரன்களும், ரிங்கு சிங் 21 ரன்களும் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்து கொல்கத்தா அணி வெற்றிப்பெற்றது.

கொல்கத்தா அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. கடைசி பந்துக்கு முன்னதாக ரஸ்ஸல் அவுட் ஆக, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எனினும் கடைசி பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in