

சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் முக்கியமான லீக்ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், சிஎஸ்கே அணியின் முதன்மை விளம்பரதாரராக இருந்து வருகிறது. நேற்றைய போட்டியின் நடுவே, சிஎஸ்கே ரசிகர்களால் ‘சின்ன தல’ என்று செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியாக வந்திருந்தார்.
சேப்பாக்கம் மைதானத்தில் திடீரென அவர் வலம் வந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் சுரேஷ் ரெய்னாவை கண்டதும் சிஎஸ்கே ரசிகர்கள் உணர்ச்சி பொங்க ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து ரெய்னா, ரசிகர்களுடன் சேர்ந்து விளையாட்டை ரசித்தார்.
மேலும், ஆர்வமாக இருந்த சிஎஸ்கே ரசிகர்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார். போட்டியின் முடிவில், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட பதிரனாவுக்கு இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ரூபா குருநாத்துடன் இணைந்து சுரேஷ் ரெய்னா விருது வழங்கினார்.
முன்னதாக இப்போட்டியை முன்னிட்டு நேற்று முன்தினம் சென்னைக்கு வந்த சுரேஷ் ரெய்னாவின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.