IPL 2023: RCB vs DC | பில் சால்ட்டின் ‘ஒன்மேன் ஷோ’ - டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி

IPL 2023: RCB vs DC | பில் சால்ட்டின் ‘ஒன்மேன் ஷோ’ - டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி
Updated on
1 min read

டெல்லி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

182 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் அதிரடி துவக்கம் கொடுத்தாலும், விரைவாகவே ஆட்டமிழந்தார். பவர் பிளே முடிவதற்குள்ளாகவே 22 ரன்களில் வார்னர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். வார்னர் நடையைக்கட்டினாலும் மற்றொரு ஓப்பனர் பில் சால்ட் பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

இதனால் டெல்லி அணி 10 ஓவர்களில் 120 ரன்களை எட்டியது. மிட்சல் மார்ஷ் 26 ரன்கள் எடுத்து விக்கெட்டானர். இறுதி நேரத்தில் பில் சால்ட் 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதிக்கட்டத்தில் ரூசோவ் அதிரடியாக ரன்கள் சேர்க்க டெல்லி அணி 16.4 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ரூசோவ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் சேர்த்தார்.

பெங்களூரு தரப்பில் ஹேசல்வுட், ஹர்ஷல் படேல், கரண் ஷர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பெங்களூரு இன்னிங்ஸ்: டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியும் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஃபாப் டு பிளெசிஸ், விராட் கோலி இணை 10 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி ரன்களைச் சேர்த்தனர்.

11வது ஓவரில் ஃபாப் டு பிளெசிஸ் 45 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த மேக்ஸ்வெல் அதே ஓவரில் டக்அவுட்டானார். 15 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த விராட் கோலியை 55 ரன்களுடன் முகேஷ் குமார் வெளியேற்ற 16 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 137 ரன்களைச் சேர்த்திருந்தது.

விராட் கோலி விட்டுச் சென்ற இடத்தை நிரப்பும் வகையிலான மஹிபால் லோமரோரின் 3 சிக்ஸ்களுடனான அதிரடி ஆட்டம் ஆர்சிபி ரசிகர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. கூடவே தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு ஒரு சிக்ஸை விளாசி இருப்பை பதிவு செய்துவிட்டு 11 ரன்களுடன் கிளம்பினார்.

அவருக்கு அடுத்து வந்த அனுஜ் ராவத் சிக்சர் அடிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 181 ரன்களைச் சேர்த்தது. மஹிபால் லோமரோர் 54 ரன்களிலும், அனுஜ் ராவத் 8 ரன்களிலும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணி தரப்பில் மிட்செல் மாஷ் 2 விக்கெட்டுகளையும், முகேஷ்குமார், கலீல் அஹமத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in