கே.எல்.ராகுலுக்கு பதில் கருண் நாயர் - லக்னோ அணி அறிவிப்பு

கே.எல்.ராகுலுக்கு பதில் கருண் நாயர் - லக்னோ அணி அறிவிப்பு
Updated on
1 min read

ஐபிஎல் தொடரிலிருந்து கே.எல் ராகுல் விலகியதால் அவருக்கு பதிலாக கருண் நாயர் அணியில் சேர்க்கப்படுவதாக எல்எஸ்ஜி அணி அறிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் நேற்று அதிகாரப்பூர்வமாக விலகினார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக லக்னோ அணி நிர்வாகம் அறிவித்தது.

"கே.எல். ராகுலுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தசைநார் சிதைவு ஏற்பட்டுள்ளது. அதற்கு அறுவை சிகிச்சை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவரை அதிகம் மிஸ் செய்கிறோம்" என லக்னோ அணி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்குத் தேவையான ஆதரவை லக்னோ அணி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் கருண் நாயர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை அந்த அணி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

கருண் நாயர் இதுவரை 76 ஐபிஎல் போட்டிகளில் 1,496 ரன்களை எடுத்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் ஏலம் எடுக்கப்படவில்லை. தற்போது அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லக்னோ அணியில் இணைந்தது குறித்து பேசிய கருண் நாயர், “சூப்பர் ஜெயண்ட்ஸ் உடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி. ராகுல் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அவர் வலுவாக மீண்டும் வருவார் என நம்புகிறேன். எனது அணி வீரர்களை விரைவில் சந்தித்து அணிக்கான எனது பங்களிப்பை வழங்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in