கோலி vs கம்பீர் | ‘தோல்வியை அமைதியாக ஏற்க வேண்டும்’ - சேவாக் அறிவுரை

கோலி, கம்பீர் மற்றும் சேவாக்
கோலி, கம்பீர் மற்றும் சேவாக்
Updated on
1 min read

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் விராட் கோலி மற்றும் கம்பீர் இடையிலான வாக்கு வாதம் படு வைரலாக பேசுபொருளாகி உள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக், இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

“லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் முடிந்ததும் நான் டிவியை ஆஃப் செய்து விட்டேன். அதனால் அதன் பிறகு என்ன நடந்தது என்பதே எனக்கு தெரியாது. மறுநாள் காலையில் சமூக வலைதளத்தின் மூலமாகவே இது குறித்து தெரிந்து கொண்டேன். நடந்தது எதுவோ அது அறவே சரியானது அல்ல.

போட்டியில் தோல்வியை தழுவியவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு, அப்படியே அமைதியாக கடந்து செல்ல வேண்டும். வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுவார்கள். அந்தச் சூழலில் அவர்கள் இருவரும் அங்கு ஒருவருக்கு ஒருவர் ஏதேனும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

இது தொடர்பாக நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட்டின் முகமாகவும், அடையாளமாகவும் திகழ்கிறார்கள். அவர்களை கோடான கோடி பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். அதில் சிறு பிள்ளைகள், இளைஞர்களும் அடங்குவர். இதன் மூலம் அவர்களுக்குள் ‘நாமும் இது போல செய்யலாம் போல’ என்ற எண்ணம்தான் மேலோங்கும். இதை அவர்கள் இருவரும் தங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். அது இருந்தால் இனி இதுபோல நடந்து கொள்ள மாட்டார்கள்.

அதோடு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இது மாதிரியான செயல்கள் நடைபெறாமல் இருக்க வீரர்களை தடை செய்யும் நடவடிக்கையை கொண்டு வர வேண்டும். ஏனெனில், களத்தில் இப்படி நடப்பது நல்லதுக்கு அல்ல” என சேவாக் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in