Published : 04 May 2023 08:09 AM
Last Updated : 04 May 2023 08:09 AM
மும்பை: நடப்பாண்டில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி, பிரான்ஸின் கிளியான் பாப்பே, அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ், குத்துச்சண்டை வீரரான மெக்சிகோவைச் சேர்ந்த கேன்சலோ ஆல்வரெஸ் ஆகியோர் உள்ளனர்.
உலகில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 பேர் கொண்ட பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி இவர்கள் கடந்த 12 மாதங்களில் கூட்டாக ஈட்டிய வருமானம் சுமார் ரூ.9 ஆயிரம் கோடியாகும். கோல்ஃப் மற்றும் கால்பந்தில் மத்திய கிழக்கு நாடுகள் அதிகளவில் முதலீடு செய்வதால் விளையாட்டு வீரர்கள் முன்னெப்போதையும் விட இப்போது அதிக பணம் சம்பாதிப்பதாக ஃபோர்ப்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி, கிளியான் பாப்பே, லெப்ரான் ஜேம்ஸ்,கேன்சலோ ஆல்வரெஸ் ஆகியோர் 2023-ம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களாக மாறியுள்ளனர். இவர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளனர்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவை சேர்ந்த அல் நாஸர் அணிக்கு மாறிய பின்னர் உலகின் அதிக சம்பளம் வாங்கும் வீரராக மாறினார். அவர், அல் நாஸர் அணியில் தனது சம்பளத்தை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தினார். அதே நேரத்தில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக விளையாடி வரும் லயோனல் மெஸ்ஸி, கிளியான் பாப்பே ஆகியோர் அதிக வருமானம் பெறும் பட்டியலில் அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த ஆண்டு இறுதியில் மான்செஸ்டர் யுனைட்டெட் கிளப்பில் இருந்து இடம் பெயர்ந்து அல்நாஸர் அணியில் 2025-ம் ஆண்டு வரை விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஃபோர்ப்ஸ் கூற்றுப்படி ரொனால்டோவின் ஆண்டு சம்பளம் சுமார் ரூ.1,110 கோடியாக உள்ளது.
பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியின் முன்கள வீரரான லயோனல் மெஸ்ஸியின் வருமானம் ரூ.1,063 கோடியாகவும், பாப்பேவின் வருமானம் சுமார் ரூ.983 கோடியாகவும் உள்ளது. அமெரிக்க கூடைப்பந்து வீரரான லெப்ரான் ஜேம்ஸின் வருமானம் ரூ.977 கோடியாகவும், மெக்சிகோ குத்துச்சண்டை வீரரான கேன்சலோ ஆல்வரெஸின் வருமானம் ரூ.899 கோடியாகவும் உள்ளது.
இந்த தொகையில் வீரர்கள் களத்தில் விளையாடும் ஆட்டத்துக்கான ஊதியம், பரிசுத்தொகை, ஊக்கத் தொகை மற்றும் களத்துக்கு வெளியே விளம்பரங்களின் வாயிலாக பெறும் பலன்களும் அடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT