

சுவிட்சர்லாந்து அணியின் பயிற்சியாளர் ஒட்மார் ஹிட்ஸ்பெல்ட் ஓய்வு பெற்றார். தனது சகோதரர் வின்பிரெட் (81) இறந்த துக்கத்துக்கு இடையிலும் அர்ஜென்டீனாவுக்கு எதிராக ஆடிய சுவிட்சர்லாந்து வீரர்களை உற்சாகப்படுத்திய ஹிட்ஸ்பெல்ட் கனத்த இதயத்துடன் விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அர்ஜென்டீனாவுடனான இந்தத் தோல்வி 1999 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியைத்தான் எனக்கு நினைவுபடுத்துகிறது. எனது இதயம் முழுவதும் உணர்ச்சி வசத்தால் நிரம்பியுள்ளது. இதுபோன்ற உணர்ச்சிபூர்வமான தருணங்கள் கால்பந்து விளையாட்டில் மட்டுமே கிடைக்கும். அதனால்தான் கால்பந்தை விரும்புகிறேன்” என்றார். சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடி வரும் போரஷ்யா டார்ட்மன்ட், பேயர்ன் மூனிச் அணிகளுக்கு பயிற்சி யளித்தவரான ஹிட்ஸ்பெல்ட், உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வு பெறவிருப்பதாக ஏற்கெனவே கூறியிருந்தார்.
அதன்படி இப்போது விடைபெற்றுவிட்ட அவர் மேலும் கூறுகையில், “அடுத்ததாக தொலைக்காட்சியில் பணியாற்றவிருக்கிறேன். விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு செல்வேன். ஆனால் பயிற்சியாளராக அல்ல, பத்திரிகையாளராக செல்வேன். பயிற்சியாளர் பணி கடினமானது. என்னுடைய பயிற்சியாளர் வாழ்க் கையை நினைத்து பெருமை கொள்கிறேன். முன்னணி கால்பந்து கிளப்புகளுக்கும், சுவிட்சர்லாந்து அணிக்கும் பயிற்சியளித்தது எனது அதிர்ஷ்டம். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது பொற்காலம். அதனால் கனத்த இதயத்துடன் விடை பெறுகிறேன்” என்றார்