

தாஷ்கந்து: நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார் இந்திய வீரர் ஆஷிஷ் சவுத்ரி. ஈரான் வீரர் மெய்சம் கெஷ்லாகியை அவர் வீழ்த்தினார். உஸ்பேகிஸ்தானில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது.
28 வயதான அவர் இமாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே பவர்ஃபுல் பன்ச் கொடுத்து மெய்சம் கெஷ்லாகியை அதிரச் செய்தார். அதன் பலனாக 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 2019-ல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றவர் ஆஷிஷ். தற்போது 80 கிலோ எடைப்பிரிவில் அவர் பங்கேற்று விளையாடி வருகிறார்.
அடுத்த சுற்றில் இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற கியூபாவின் ஆர்லன் லோபஸை அவர் எதிர்கொள்கிறார். நிச்சயம் இந்தப் போட்டி சவாலானதாக இருக்கலாம். மற்றொரு போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஹர்ஷ் சவுத்ரி தோல்வியை தழுவியுள்ளார்.
கோவிந்த் சஹானி (48 கிலோ), தீபக் போரியா (51 கிலோ), சச்சின் சிவாச் ஜூனியர் (54 கிலோ), முகமது ஹுசாமுதீன் (57 கிலோ), வரீந்தர் சிங் (60 கிலோ), சிவ தாபா (63.5 கிலோ), ஆகாஷ் சங்வான் (67 கிலோ), நிஷாந்த் தேவ் (71 கிலோ) , சுமித் குண்டு (75 கிலோ), ஆஷிஷ் சவுத்ரி (80 கிலோ), ஹர்ஷ் சவுத்ரி (86 கிலோ), நவீன் குமார் (92 கிலோ) மற்றும் நரேந்தர் பெர்வால் (92+ கிலோ) என மொத்தம் 13 வீரர்கள் இந்தியா சார்பில் நடப்பு ஆடவர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பல்வேறு எடைப்பிரிவில் பங்கேற்றுள்ளனர்.