

லார்ட்ஸ் மைதானத்தின் 200வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாளை நடைபெறும் எம்.சி.சி.-ரெஸ்ட் ஆஃப் த வேர்ல்ட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்பாக எம்.சி.சி. அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் வலைப்பயிற்சியை 10 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டதாகத் தெரிவித்தார்.
ரெஸ்ட் ஆஃப் த வேர்ல்ட் அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷென் வார்ன் கேப்டனாகச் செயல்படுகிறார்.
சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:
"ஓய்வு பெற்ற பிறகு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக தினங்களைக் கழிக்கிறேன். நான் 10 நாட்களுக்கு முன்பாக இந்தப் போட்டிக்காகப் பயிற்சி செய்யத் தொடங்கினேன். சில பந்துகளை அடிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் பந்துகளை மட்டையின் மையப்பகுதியில் பட வைக்க முயற்சி செய்து வருகிறேன்.
கிரிக்கெட் போட்டிகளை பார்த்து வருகிறேன், அதிகம் கிரிக்கெட்டை விட்டு நான் விலகிவிடவில்லை” என்றார்.
லார்ட்ஸ் அனுபவம் பற்றி அவர் கூறுகையில், “லார்ட்ஸில் விளையாடுவது எப்போதுமே சிறப்புதான். ரசிகர்கள் மற்றும் சூழ்நிலை அபாரமாக இருக்கும். எத்தனை முறை லார்ட்ஸில் விளையாடினாலும் சலிப்பு ஏற்படாது.
எனவே இந்த சிறப்புத் தருணத்தை கொண்டாடுவதே முதல் நோக்கம், ரசிகர்களுக்கு விருந்து அளிக்க வேண்டும். நல்ல சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.
சச்சின் அணியில் ராகுல் திராவிட், பிரையன் லாரா, பிரட் லீ ஆகியோர் உட்பட பிரபல வீரர்கள் உள்ளனர். ஷேன் வார்ன் தலைமை ரெஸ்ட் ஆஃப் த வேர்ல்ட் அணியில் ஆடம் கில்கிறிஸ்ட், கெவின் பீட்டர்சன், முத்தையா முரளிதரன், ஷாகித் அஃப்ரீடி உள்ளிட்ட பிரபல வீரர்கள் இடம்பெறுகின்றனர்.
நாளை இந்த ஆட்டம் மதியம் 3.15 மணிக்குத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.